ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.
சரஸ்வதிபூஜை – அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
The post சரஸ்வதி பூஜை: வீட்டில் வழிபாடு செய்வது எப்படி? appeared first on Dinakaran.