நாதன் கோயில் ஜகந்நாதப் பெருமாள்

‘நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்’ என்கிறார் திருமங்கையாழ்வார். புராண காலந்தொட்டே, துவாபர யுகத்திலிருந்தே இந்தத் தலம் நாதன் கோயில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நேரடியாக பரந்தாமன் இறங்கி வந்து கோயில் கொண்டதனாலும் இதனை நாதன் கோயில் என்று சொல்லலாம்.

அப்படி நாதன் இறங்கிவந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மஹாலட்சுமியின் விருப்பம்! அதாவது, தான் நிரந்தரமாக ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு வேண்டி அதற்காக தவமிருக்க பூவுலகில் அன்னை தேர்ந்தெடுத்தது இந்தத் தலத்தைதான். இருக்காதா பின்னே!

எம்பெருமானின் பாதங்களைப் பற்றியபடியே, பாற்கடலில் எத்தனை காலம்தான் ஓட்டுவது? தன் நாயகனை தரிசிக்க வருவோரெல்லாம் அவரது தாமரை முகத்தைப் பார்த்தபடிதான் பேசுகிறார்களே தவிர, அவர் பாதம் நோக்குகிறார்களா? தன்னை அவர்கள் கவனிக்காமல் போவதற்கு, தான் பெருமானின் பாதங்களைப் பற்றியபடியே கிடப்பதால்தானா? தன்னையும் அவர்கள் நோக்க வேண்டு மானால் தான், ஆதிசேஷனைப் போல பரந்தாமனின் முகத்தருகே அமர்ந்திருந்தால்தான் அது முடியும்! அந்தப் பேரருளாளனைத் தன் மடியில் கிடத்தி அந்த சாக்கில் தன் எண்ணம் ஈடேற முயற்சிக்கலாம்தான். ஆனால் அதற்கு ஏற்கெனவே அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட ஆதிசேஷன் அனுமதிப்பானா? சரி, இதற்கு ஒரே வழி, இந்த மாதவனுடன் தானும் ஐக்கியமாகிவிடுவதுதான். எப்படி ஐக்கியமாவது, எங்கே ஐக்கியமாவது? அதோ, பரந்து விரிந்த அந்தத் திருமார்பு, அதில் உறைந்துவிடவேண்டியதுதான்.

திடுதிப்பென்று இப்படி ஒரு ஆசையைத் தான் வெளியிட்டால், அதை நாராயணன் எப்படி எடுத்துக்கொள்வார்? அவர் மறுத்துவிட்டாரானால் என்ன செய்வது? அதனால் வெறும் கோரிக்கையாகத் தன் விருப்பத்தை அவர்முன் வைக்காமல், தன்னை வருத்திக்கொண்டு ஒரு தவம் மேற்கொண்டால், எம்பெருமான் இரக்கம் கொள்ள மாட்டாரா? பார்வதியும் அப்படி ஒரு கடுந்தவம் மேற்கொண்டுதானே மகாதேவனின் உடலில் இடப்பாகத்தைப் பெற்றாள்!

இவ்வாறு சிந்தித்த திருமகள், உடனே இந்த நாதன் கோயிலுக்கு வந்தாள். தவம் இயற்றத் தொடங்கினாள். தன் பாதங்களை வருடிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியின் உள்ளக்கிடக்கை மானுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் எந்த விருப்பமும் நினைத்த மாத்திரத்தில் நிறைவேறிவிட்டால், பிறகு அந்த விருப்பத்தால் கிடைக்கும் பலனுக்கு மதிப்பு இருக்காது என்பதை திருமகளுக்கே உணர்த்தத் திருமால் மேற்கொண்ட திருவிளையாடல் தானே இது!

தேவியைப் பின் தொடர்ந்து சென்றார் மஹாவிஷ்ணு. நந்திபுர விண்ணகரமென்னும் இந்த நாதன் கோயிலில், கிழக்கு நோக்கி தவமிருந்த அலைமகளுக்கு நேரே நின்று மேற்கு நோக்கி தரிசனம் தந்தார். கூடவே அவளுடைய விருப்பத்தையும் தான் நிறைவேற்றுவதாக வாக்களித்து தன் நெஞ்சில் அப்போதே அவளை ஏற்றுக்கொண்டார்.

அது என்ன நந்திபுர விண்ணகரம்? விண்ணகரம் என்பது மட்டுமல்ல, இந்த ஊரை அடுத்து பழையூர், பம்பப் படையூர், அரியப் படையூர், பட்டீஸ்வரம் என்றெல்லாம் ஊர்கள் இருப்பதைக் கேள்விப்படுவோரும், பார்ப்போரும், பளிச்சென பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை நினைவுகொள்ள முடியும்.

ஆமாம், சோழ சாம்ராஜ்யத்தை விளக்கிய கல்கி, மேலே சொன்ன விண்ணகரம் விண்ணை முட்டும் மாட மாளிகைகளைக் கொண்டிருந்தது என்றும், பிற ஊர்களில் சோழனின் போர்ப்படை பாசறைகள் இருந்ததாகவும் விவரித்திருப்பார். அந்த நாவலின் ஒரு பிரதான கதாபாத்திரமான குந்தவை நாச்சியார் வழிபட்ட திருக்கோயில் இது.

இது சரித்திர பின்னணி, சரி, அது ஏன் ‘நந்திபுர’ விண்ணகரம்? இதற்குப் புராண சம்பவம்தான் காரணம். மாலியவான், மாலி, சுமாலி என்ற மூன்று அரக்கர்கள் அழிசாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கொடுங்கோன்மைக்கு ஈடு கொடுக்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் அந்த அரக்கர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட, நந்திதேவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் போனார்கள். அங்கே ஜெய – விஜயன் என்ற வாயிற் காவலர்கள் நின்றிருந்தார்கள். இவர்கள் உள்ளே போய் மஹாவிஷ்ணுவிடம் சம்மதம் பெற்று வந்து சொன்ன பிறகுதான் உள்ளே நுழைய முடியும். ஆனால் அரக்கர்களின் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாலும், நந்தி பகவானே தங்களுக்குத் தலைமை ஏற்று நடத்திச் செல்வதாலும், உடனடியாகத் திருமாலின் அனுக்ரகம் வேண்டியும், காத்திருக்கப் பொறுமையில்லாத அவர்கள் ஜெய – விஜயரைப் புறக்கணித்து உள்ளே புகுந்தனர்.

இதனால் வெகுண்ட ஜெய – விஜயர், தலைமை ஏற்று நடத்திவந்த நந்திக்கு கொடிய உஷ்ண நோய் உண்டாகுமாறு சபித்துவிட்டனர். அதனால் பெருந் தீ போல வெம்மை தகிக்க, தவித்துப்போன நந்தி, தன் தலைவன் சிவபெருமானைத் தஞ்சமடைந்தார். அவரோ, மீண்டும் ஜெய – விஜயரையே அணுகுமாறும் அவர்கள் கோபம் தணிந்து சாபம் விலகும் எனவும் அறிவுறுத்தினார். அவ்வாறே நந்தி பகவான் அவர்களை நாடிச் சென்றார். அவர்களும் மனமிரங்கி, நாதன் கோயில் தலத்துக்குச் சென்று நந்தி, பெருமாளைக் குறித்து பிரார்த்தனை செய்தாரென்றால், அவருக்குப் பெருமாள் தரிசனம் தருவதோடு, அவரை உஷ்ணத் தொல்லையிலிருந்து விடுவிப்பார் எனவும் தெரிவித்தனர். அப்படியே ஆயிற்று. இந்தத் தலமும் நந்திபுரம் என்றாயிற்று. ‘நந்தி பணி செய்த நகர்’ என்று திருமங்கையாழ்வார் பாடியபடி, இந்தப் பெருமாளை நந்தி பகவான் தொழுது, போற்றி பேரருள் பெற்றார்.

அமர்ந்த திருக்கோலம் காட்டுகிறார் இந்த விண்ணகரப் பெருமாள். ஸ்ரீதேவிக்குத் தன் மார்பில் இடம் கொடுத்ததால் ஸ்ரீநிவாசன் என்றும், அரக்கர்களின் கொடுமையிலிருந்து ஜகத்தோர் அனைவருக்கும் விமோசனம் அருளியதால் ஜகந்நாதன் என்றும் பெயர் கொண்டிருக்கிறார் இந்தப் பெருமாள். உற்சவ மூர்த்தியின் வலது கரம் அபயமளிக்கிறது; இடது கரமோ ‘வா’ என நம்மையெல்லாம் வாஞ்சையோடு அழைக்கிறது. ‘ஆஹ்வான முத்திரை’ என்றழைக்கப்படும் இந்தக் கோலம் பெரிதும் பரவசமூட்டுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி, சண்பகவல்லித் தாயார் மற்றும் ஆண்டாள் சமேதராக இந்த உற்சவர் சேவை சாதிக்கிறார். ‘வாளும், வரிவில்லும், வளை ஆழி, கதை, சங்கம் இவை அங்கை உடையான்’ என்ற திருமங்கை ஆழ்வார் ரசித்துப் பாடிய நேர்த்தியின்படி, இவர் வாள், வில், சக்கரம், கதை, சங்கு ஆகியவற்றை ஏந்தி, தன் பக்தர்களை எந்தத் துன்பமும் நெருங்கவிடாமல் காக்கிறார்.

கருவறைக்கு வலது பக்கத்தில் ரிஷி ரூபத்தில் நந்திகேஸ்வரரும் வலது பக்கத்தில் பிரம்மனும் கொலுவிருக்கிறார்கள். கருவறை மண்டபத்தில் இடது பக்கம் ஆஞ்சநேயர் கரம் குவித்து பணிவாகக் காட்சி தருகிறார். ராம – ராவண யுத்தத்துக்குப் பிறகு அனுமன் இங்கு வந்துதான் ஓய்வு எடுத்துக்கொண்டாராம்.

சண்பகவல்லித் தாயார் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார். இங்கே தாயாருக்கு உற்சவர் இல்லை; இந்த உற்சவர் மூலக்கருவறையில் பெருமாளுக்கு அருகே இருக்கிறார். ஆனால் தாயார் சந்நதியில் அனுமனைக் காணலாம். ஆண்டாளுக்கும் தனி சந்நதி உண்டு. ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் கலந்து கொள்வோர், மகப்பேறு பெற்று மகிழ்கிறார்கள்.

இங்கே பெருமாள் மேற்கு நோக்கி சேவை சாதிப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது வள்ளல் சிபி சக்கரவர்த்தியைப் பற்றியது. ஒரு புறாவுக்காகத் தன் சதையையே அறுத்துக் கொடுத்தானே அந்த கருணை வள்ளலைப் பற்றியது. வேடனுடைய பிடியிலிருந்து தப்பித்து வந்து தன்னிடம் தஞ்சமடைந்த புறாவைக் காப்பதற்காக, ஒரு தராசுத் தட்டில் புறாவையும், இன்னொரு தட்டில் தன் சதையையும் அறுத்து வைத்தான் சிபி.

ஆனால் எவ்வளவு வைத்தாலும், புறா தட்டுக்கு இந்தத் தட்டு சமமாக வராததால், சதைத் தட்டில் தானே ஏறி நின்று தன்னையே மொத்தமாகத் தியாகம் செய்தானே, அவனுடைய, தேவரும் போற்றும் அந்தச் செய்கையைப் பாராட்டும் வண்ணம் அந்த சம்பவம் நடந்த இந்த சண்பகாரண்யத்தை நோக்கியபடி, மேற்கு நோக்கியபடி பெருமாள் காட்சி தருகிறார். வெறும் காட்சி மட்டுமல்ல; சிபி சக்கரவத்தியின் இரக்க, தியாக உணர்வைப் பாராட்டும் வகையில் அவனுக்கு மோட்சகதி அளித்தும் பெருமை சேர்த்தார்.

‘புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெரியோன்’ என்று ராமனை கம்பர் புகழ்வார். அதுவும் சிபி சக்கரவர்த்தியின் புகழே! விபீடணன் சரணாகதியென வந்தபோது அனுமனைத் தவிர பிற அனைவருமே சந்தேகக் கண் கொண்டு அவனைப் பார்த்து, அவநம்பிக்கை மிகுத்து, அவனை சேர்த்தல் கூடாது என்று வாதிட்டார்கள். அப்போது தன்னை அடைக்கலமென்று வந்தவரை எந்த இழப்பை மேற்கொண்டாலும் ஏற்று காத்தருளிய பலரைப் பற்றி ராமன் கூறினான். அப்படி அவன் பட்டியலிட்டவர்களில் பிரதானமானவர் சிபி சக்கரவர்த்தி. ‘பிறந்த நாள் தொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி மறந்த நாள் உண்டோ!’ என்று கேட்டான் அவன். துலை என்றால் தராசு என்று பொருள்.

ராம – ராவண யுத்தத்துக்குப் பிறகு அனுமன் ஓய்வு கொண்ட தலம் இது என்று ஏற்கெனவே குறிப்பிட்டது போலவே, ‘ராமனாய் பல துன்பங்களை மேற்கொண்ட என் அண்ணல், இங்கே எந்தக் குறையுமில்லாமல் சந்தோஷமாக வாழ்கிறார்’ என்று நெகிழ்கிறார் திருமங்கையாழ்வார்:

“தம்பியொடு தாமொருவர்
தந்துணைவி
காதல் துணையாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர்
தாமினிது மேவு நகர்தான்
கொம்பு குதிகொண்டு குயில் கூவ
மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர
விண்ணகரம் நண்ணு மனமே’’

‘அன்னாளில் உலகே வியந்தவனாகத் திகழ்ந்த ராமன், தம்பி இலக்குவனுடனும், மனைவி சீதையுடனும் உடன்வர, தீப்பற்றி எரியும் ஆரண்யத்தில் உலவினாரே! இப்படித் துன்புற்ற அந்த நாயகன், குயில்கள் கூவும், மயில்கள் நடனமிடும், வாசமிகு எழில் சோலைகள் சூழ்ந்த இந்த திவ்ய தேசத்தில், களைப்பெல்லாம் நீங்கி, களிப்போடு ஓய்வெடுக்கிறான்’ என்று பாடி மகிழ்கிறார் ஆழ்வார். அதை நிரூபிப்பது போல ராமர் தனி சந்நதியில் சீதை, லட்சுமணனுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

தன் தாயாரின் நீங்கா நோய்த் துயரை நீக்கி அருளும்படி இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டார் விஜயநகர சொக்கப்ப நாயக்கர் என்னும் மன்னன். அவ்வாறே இறைவன் அந்தத் தாயின் நோய் விலக்கி நன்மை நல்கிட, அதனால் பெரிதும் மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்குப் பல அரிய திருப்பணிகளைச் செய்து நன்றிக் கடன் செலுத்தினார். இன்றும் அவர் தன் மனைவியருடன் சிற்ப வடிவில் இங்கே காட்சி தருகிறார்.

தியான ஸ்லோகம்
திவ்யே நாந்திவநே ஹரிஸ்த்ரி ஜகதாம் நாதஸ்ஸநாம் நாச தத்
தேவீ சம்பக வல்லிகா பரிஸரே தந்மந்த்ர தீர்த்தம் ஸர:
ஸ்ரீமந் மந்த்ர விமாந மத்யவிலஸத் பச்சாந்முகஸ் ஸூரிபி:
தேவீபிஸ் ஸஹநந்திகேச்வர தபஸ் ஸாக்ஷாத் க்ருதோ பாஸதே

எப்படிப் போவது: கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது நந்திபுர விண்ணகரம். கொறுக்கை என்ற இடத்துக்கு அருகில். பேருந்து, ஆட்டோ
வசதிகள் உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 முதல் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் 8.30 மணிவரையிலும்.

முகவரி: அருள்மிகு ஜகந்நாதப் பெருமாள் திருக்கோயில், நாதன்கோயில், சேஷம்பாடி அஞ்சல், பம்பப்படையூர் வழி, கும்பகோணம் தாலுகா, தஞ்சை வட்டம் – 612703.

The post நாதன் கோயில் ஜகந்நாதப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: