திருவொற்றியூரில் மழைநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் விபத்து அபாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரயில்வே நிர்வாகம் மழைநீர் தொட்டிக்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் விபத்து அபாயம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூரில் இருந்து மாட்டுமந்தை ரயில்வே மேம்பாலம் வழியாக பேசின் சாலை, மணலி, மீஞ்சூர், மாதவரம் மற்றும் ஐஓசி போன்ற பகுதிகளுக்கு தினமும் பேருந்து, லாரி, கார், பைக் போன்ற ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் மாட்டுமந்தை மேம்பாலம் இறங்கும் இடத்தில் சாலையோரம் மழைநீர் வெளியேற்றும் தொட்டி அமைக்க தென்னக ரயில்வே துறை பள்ளம் தோண்டியது. ஆனால், பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பள்ளம் திறந்தவெளியில் உள்ளது. இதனால் பாலத்தில் இருந்து வாகனங்களில் கீழே இறங்குபவர்கள் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலமுறை வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர்.

இதுேபால் கால்நடைகளும் பள்ளத்தில் தவறிவிழுந்துள்ளன. பள்ளத்தை மூடி உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, ரயில்வே துறை அதிகாரிகள் காலம் கடத்தாமல் பள்ளத்தை மூடி சாலை போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூரில் மழைநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: