பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அனுமதி மறுப்பு வடலூர் வள்ளலார் கோயிலில் இருந்து 1 கி.மீ தூரத்தில் கட்டுமான பணிகள்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயிலின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், வள்ளலார் கோயிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை, தியான மண்டபம், கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில் விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அனுமதிகளை எதிர்த்து புதிய வழக்கு தொடரப்பட்டது. இந்த புதிய மனு மீதான விசாரணையின் போது, சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.சுரேஷ் வாதிட்டார். அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள்படி பெறப்பட்டுள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த வாதங்களை நீதிபதிகள், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக, நகரமைப்பு துறை உதவி இயக்குனர், வேளாண் துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே நகரமைப்பு துறை இயக்குனர் ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால், இந்த விதிகளுக்கு முரணாக, வள்ளலார் கோயிலின் பின்புறம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண்துறை உதவி இயக்குனர் அறிக்கை அளிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதனால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள கூடாது. அதேசமயம், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குனர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளார். அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. கட்டுமான பணிகளை தொடரலாம் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க அனுமதி மறுப்பு வடலூர் வள்ளலார் கோயிலில் இருந்து 1 கி.மீ தூரத்தில் கட்டுமான பணிகள்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: