மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல கட்டமாக இதுநாள் வரை ரூ.170.60 கோடி மதிப்பிலான 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தற்போது 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.
* சிறப்பான சேவை-ஜெர்மன் தூதர் பாராட்டு
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெர்மன் தூதரக துணை தூதர் மிச்செல குல்சர், பஸ் டிக்கெட் ஒன்றை காண்பித்து இது நேற்று இரவு மாநகர பேருந்தில் பயணித்த டிக்கெட் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நான் எப்போதும் சென்னையில் மாநகரப் பேருந்தில்தான் பயணிப்பேன். எம்டிசி சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. பேருந்து சேவையை மிகவும் பாராட்டுகிறேன். பேருந்துகள் மிகச் சிறப்பாக இயக்கப்படுகிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் வாயிலாக தாழ்தளப் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்து மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் பயணிக்கும் வகையில் எளிதாக உள்ளன. மேலும் தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தினை வழங்கி வருகிறது, பெண்ணிய பார்வையில் இது மிகவும் வரவேற்புக்குரிய ஒன்று. தினமும் அலுவலகம் மற்றும் யோகா வகுப்புகளுக்கு செல்ல அரசு இலவச பேருந்தை பயன்படுத்துகிறேன். பேருந்துகள் வருகை குறித்து அறிந்து கொள்ளும் செயலி மிக உதவியாக இருக்கிறது. 5C பேருந்து செல்லும் வழித்தடத்தில் ஒரு தாழ்தளப் பேருந்து இயக்க வேண்டும் என எம்டிசிக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
The post ரூ.22.69 கோடியில் 25 புதிய தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.