2ம் சுற்று கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால் சிலர் கல்லூரிகளில் சேராமல் போவது உள்ளிட்ட காரணங்களால் மீதமாகும் இடங்களுக்கு 3 மற்றும் 4வது கலந்தாய்வு மூலம் இடங்கள் நிரப்பப்படும். அதன்படி 2ம் சுற்று முடிவில், அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் படிப்பில் 32, இஎஸ்ஐ கல்லூரியில் 1 என 33 இடங்களும், 7.5 சதவிகித இடங்களில் பிடிஎஸ் படிப்பில் அரசுக் கல்லூரியில் 3 இடங்கள், சுயநிதி கல்லூரியில் 5 இடங்கள் என மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன.
இவற்றுக்கான 3ம் சுற்று கலந்தாய்வு நேற்று (அக்.9) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மீதமாகும் இடங்களுக்கு இறுதியாக 4ம் சுற்று கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். 4வது சுற்று கலந்தாய்வில் ஒரு வைப்புத்தொகையை மாணவர் செலுத்தி, தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அந்த தொகை மீண்டும் அவர்களுக்கே திருப்பி கொடுக்கப்படும். அப்படியும் அந்தக் கல்லூரியில் சேராமல் போனால் அந்த தொகை திருப்பி கொடுக்கப்படமாட்டாது. மேலும் அடுத்த வருடக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் வருகிற 14ம் தேதி முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 41 இடங்களுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது appeared first on Dinakaran.