தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஆசான் நினைவு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை 76 ஆயிரத்து 275 ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளார். இதையடுத்து, இந்த கட்டண பாக்கியை 12 சதவீத வட்டியுடன் செலுத்துமாறு மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண வசூல் முறைப்படுத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என்று கட்டண நிர்ணயக்குழு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாணவி சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறதா என்று சரிபார்க்க வகை செய்யும் சட்டப்பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளை தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கிறதா என்று சரிபார்க்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். அப்போது, மாணவியின் தந்தை தரப்பில், 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை அக்டோபர் 18ம் தேதிக்குள் செலுத்திவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பள்ளியின் கட்டண விவரங்கள் குறித்து சரிபார்க்குமாறு கட்டண நிர்ணயக் குழுவுக்கு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

 

The post தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: