தொழிலாளர்கள் பக்கம் முதல்வர் இருக்கிறார் வாக்குறுதியை ஏற்று உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்: சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். 3 அமைச்சர்கள் நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 10 முதல் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர் நலத்துறை சார்பில் இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளையும் சரிசெய்து தருவதாக கூறியுள்ளனர். சிஐடியு தரப்பை பொறுத்தவரைக்கும் ஒரே ஒரு கோரிக்கைதான். சிஐடியு-வை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்தவுடன் அதற்கான தீர்வு காணப்படும். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது, எதற்காக இந்த போராட்டத்தை தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு தூரம் பேசியும் போராட்டத்தை தொடர்வது அவ்வளவு நல்லதாக இருக்காது. வேலைக்கு செல்லாத ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் சம்பளத்தை இழக்கிறார்கள்.

இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு சங்கத்துக்காக இவர்களின் ஊதியம் போகவேண்டுமா? ஏற்கனவே, ஒரு மாத ஊதியம் போய்விடும். இன்னும் ஒவ்வொரு நாளும் தாமதித்தால், ஊதியம் போய்க் கொண்டிருக்கிறது. நமது முதல்வர், தொழிலாளர்களை சார்ந்து அவர்களுக்கு உறுதுணையாக நின்று இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பணியாற்றி கொண்டிருக்கிறார். அவரது ஆட்சி மீது தொழிலாளர்கள் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் இருந்து விலகி வேலை க்கு செல்ல வேண்டும். எல்லா கோரிக்கைகளும் நிச்சயமாக பரிசீலிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலம் நமக்கு கிடைக்காத வளர்ச்சியை, 3 ஆண்டுகளில் கொண்டுவந்து சேர்த்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை கொண்டுவந்து, 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அற்புதமான பணியைச் செய்திருக்கிறார் முதல்வர். இந்த தருணத்தில், இதுபோன்ற போராட்டத்தினால், அடுத்த போட்டியாளர்கள் இதைவேறு மாதிரி திசைத் திருப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை கருதி, தற்போது போராடும் தொழிலாளர்களால் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் ஏந்தி, தொழிலாளர்கள் பக்கம் இந்த அரசாங்கம் முழுமையாக நிற்கிறது, முதல்வர் நிற்கிறார். எனவே இதை மனதில் ஏந்தி உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்.

 

The post தொழிலாளர்கள் பக்கம் முதல்வர் இருக்கிறார் வாக்குறுதியை ஏற்று உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்: சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: