அப்டேட் ஆகிறது சிசிடிஎன்எஸ்’ குற்றவாளிகளை பிடிக்க, தகவல் சேகரிக்க கூடுதல் தொழில்நுட்பம்: கோர்ட் சம்மன், பிடிவாரன்ட் இனி ஆன்லைனில் அனுப்பப்படும்

தமிழ்நாடு போலீசில், கடந்த 2011ம் ஆண்டு குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் தொழில்நுட்ப திட்டம் (சிசிடிஎன்எஸ்) அறிவிக்கப்பட்டது. கடந்த 2013 செப்டம்பர் 26ம் தேதி இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. மாநில அளவில், கடந்த 11 ஆண்டில் 2,401 இடங்களில் அமைந்துள்ள 1,541 போலீஸ் நிலையங்கள், 488 போலீஸ் தலைமை அலுவலகங்கள், 372 ஸ்பெஷல் யூனிட் போன்றவற்றில் பதிவான வழக்கு விவரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. எப்ஐஆர் முழு அளவில் ஆன்லைன் மயமாகிவிட்டது. இதுவரை 1.10 கோடி ஆன்லைன் புகார்கள் பதிவாகியுள்ளது. 45.08 லட்சம் எப்ஐஆர், 22.90 லட்சம் சிஎஸ்ஆர் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 7,99,404 குற்றவாளிகள் விவரம், 43,00,887 வாகனங்கள், 15,05,956 வாகன விபத்து ஆவணங்கள், 4,70,771 காணாமல் போன நபர்களின் விவரம், 3,36,538 அடையாளம் காணப்படாத சடலங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 47.86 லட்சம் காணாமல் போனதாக சான்று கேட்ட புகார்கள், 3.46 கோடி போலீஸ் சரிபார்ப்பு சான்று, 18.91 கைரேகை பதிவுகள் பெறப்பட்டுள்ளது. எப்ஐஆர் விவரங்களை 2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். ஆன்லைன் திட்டம் வந்த பின்னர் போலீஸ் நிலையத்தில் சான்று பெற பொதுமக்களை அலைகழிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆவண ஆதாரங்களை ஆன்லைன் மூலமாக பெறுவதால் மோசடி, முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

வாகன அபராதமும் ஆன்லைன் மயமாகிவிட்டது. அகில இந்திய அளவில் சிசிடிஎன்எஸ் திட்டத்தில் சுமார் 15 ஆயிரம் போலீஸ் ஸ்டேஷன்கள் சேர்க்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த குற்றம் நடந்தாலும், குற்றவாளிகள் தொடர்பாக பிற மாநில போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்க விரும்பினாலும் அதற்கு இந்த தொழில்நுட்ப திட்டம் உதவிகரமாக இருக்கிறது. இதுதொடர்பாக தொழில்நுட்ப பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘பொதுமக்களின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய இந்த சிசிடிஎன்எஸ் வெப்சைட் தகவல்கள் உதவியாக இருக்கிறது. நிறுவனம் நடத்துவோர் தொழிலாளர்களின் முன் விவரங்களை சரிபார்க்கவும் இதில் வசதி இருக்கிறது. குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து தொழில் செய்ய தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் குற்ற பின்னணியில் இருக்கிறார்களா? என ஆன்லைன் போர்டலில் விண்ணப்பித்து தகவல் பெறலாம். பல்வேறு வகையிலான போலீஸ் சான்றுகள் பெறுவது எளிதாக இருக்கிறது. இப்போது அப்டேட் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. விரைவில் புதிய தொழில்நுட்பத்தில் சிசிடிஎன்எஸ் நடைமுறைக்கு வரும். கோர்ட் சம்மன் அனுப்புவது, பிடிவாரன்ட் போன்றவை இனி ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும். அனைத்து வகையான குற்றவாளிகளையும் வகைப்படுத்தி கண்காணிக்க தேவையான திட்டங்கள் உருவாக்கப்படும். குற்றவாளி எந்த மாநிலத்தில் குற்றம் செய்தாலும் அவரை தேடி கண்டுபிடிக்க தேவையான ஆதாரங்களை பெறும் வகையில் திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்தபடி புகார்தாரர் ஆன்லைனில் புகார் அளித்து தேவையான நிவாரணம் பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

 

The post அப்டேட் ஆகிறது சிசிடிஎன்எஸ்’ குற்றவாளிகளை பிடிக்க, தகவல் சேகரிக்க கூடுதல் தொழில்நுட்பம்: கோர்ட் சம்மன், பிடிவாரன்ட் இனி ஆன்லைனில் அனுப்பப்படும் appeared first on Dinakaran.

Related Stories: