ஈரோடு : அம்மாபேட்டை அருகே லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வீடியோ பரவிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2-ம் தேதி, அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் போலீஸ் வாகன சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்தார். அப்போது, கோனேரிப்பட்டியிலிருந்து ஓசூருக்கு மினி வேனில் வாழைக்காய் பாரம் ஏற்றிச்சென்ற, ஊமாரெட்டியூர் கோவில் கரட்டை சேர்ந்த டிரைவர் பிரபுவிடம் (25) குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.
இது சம்பந்தமாக, வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, செல்வக்குமாரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த செல்வக்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சோதனைச்சாவடிக்கு சென்று செல்வகுமாரை மிரட்டிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி அம்மாபேட்டை மேட்டூர், பவானி ரோடு பிரிவில் நேற்று அமர்ந்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்ப்புலிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இரு புறங்களிலும் நீண்ட தொலைவுக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன. பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் அவசர தேவைக்கு செல்லும் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனுமதித்தனர். இதையடுத்து போராட்டத்தினரிடம் அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் வெங்கடாசலம், அந்தியூர் தாசில்தார் கவியரசு, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
மாலை நேரத்தில் வேலைக்கு சென்ற உறவினர்கள் திரண்டு வந்ததால் கூட்டம் அதிகரித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, பவானி, அந்தியூர், சித்தோடு பகுதியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்ததால் பரபரப்பு நிலவியது.
The post அம்மாபேட்டை அருகே லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சஸ்பெண்ட் ஆன போலீஸ்காரர் தற்கொலை appeared first on Dinakaran.