நெய்குப்பி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா: 3,000 பேர் பங்கேற்பு

திருக்கழுக்குன்றம்: நெய்குப்பி கிராமத்தில் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழாவில், 3,000 பேர் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர். தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் பிஎன்ஒய் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பில், மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், திருக்கழுக்குன்றம் ஒன்றித்திற்கு உட்பட்ட நெய்குப்பி கிராமத்தில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

இதில், 3 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, கிராமம் முழுதும் ஆர்வமுடன் மரக்கன்றுகளை நடவு செய்தனர். பின்னர், கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

வெளிநாடு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்தவர்கள் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் கிராமம் முழுவதும் சுற்றி வயல்வெளி மற்றும் கிராமத்தின் இயற்கைகளை கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், நெய்குப்பி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜூனன், துணை தலைவர் கதிரவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி பாபு, நூர்ஜஹான் பாலு, பள்ளி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நெய்குப்பி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா: 3,000 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: