வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் பகுதியில் மோகன் வயது ( 55) என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் இரண்டு பசு மாடுகள், இரண்டு கன்று குட்டிகள் வளர்த்து வருகின்றனர். பகல் நேரங்களில் மேய்ச்சல் முடித்து இரவு நேரங்களில் கடையின் வெளியே மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.
பின்னர் அதிகாலை வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்த்த மோகன் கடையின் வெளியே கட்டப்பட்டிருந்ததில் ஒரு பசு மாடு இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கத்திலும் தேடியும் பசுமாடு கிடைக்காததால் அருகில் இருந்த கடையின் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவு நேரத்தில் ஜீப் வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னுடைய பசுமாடு திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இதுகுறித்து மோகன் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஜீப்பில் பசுமாடு திருடி செல்லும் சிசிடிவி காட்சி appeared first on Dinakaran.