தர்மபுரி : தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், காவல்துறை எச்சரிக்கையை மீறி விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரியில் கடந்த 1980ம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பில் 52 பஸ்கள் நிறுத்தும் வகையில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இதே போல், 1996ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பில் டவுன் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு தினசரி 420 அரசு பஸ்களும், 120 தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. ஏ கிரேடு அந்தஸ்து தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பெற்றுள்ளது. இங்கு பஸ்களை நிறுத்த 83 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் டூவீலர், ஆட்டோ, கார் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் டிரைவர்கள் சரியான நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பஸ்களை, போக்குவரத்து போலீசார் சீர் செய்து அனுப்பி வைக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, தர்மபுரி நகர காவல்துறை சார்பில், பஸ் நிலைய நுழைவாயிலிலும், பஸ் வெளியே செல்லும் இடத்திலும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகையை அலட்சியப்படுத்தி பஸ் நிலையத்திற்குள் வாகனங்களை சிலர் ஓட்டிச் செல்கின்றனர். பஸ் நிறுத்தி வைக்கும் பிளாட்பாரங்களில், வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ் டிரைவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது.
இதுகுறித்து பஸ் டிரைவர்கள் கூறுகையில், ‘இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக டூவீலர்கள் அதிகமாக பஸ் நிறுத்தம் டிராக்கில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ்களை சரியாக நிறுத்த முடியாமல், பயணிகளை ஏற்றிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர், கார், வேன், ஆட்டோக்கள் நுழையக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை போர்டு வைத்துள்ளது. ஆனாலும் தினசரி ஆட்டோ, கார், இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கணக்கில் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தி வைக்கின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டுக்குள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைத்தும், சிலர் அத்துமீறி வாகனங்களை நிறுத்துகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அப்படி இருந்தும் வாகன ஓட்டிகள் வாகனங்களை பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தி செல்கின்றனர். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், பஸ் ஸ்டாண்டிற்குள் வாகனங்கள் செல்லாமல் இருக்கவும், நிறுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.
The post காவல்துறை எச்சரிக்கையை மீறி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு appeared first on Dinakaran.