ராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு “திருவருட் பிரகாச வள்ளலார்” என்கின்ற பெயர் ஏன் வந்தது என்றால், பிரதியுபகாரம் எதையும் கருதாமல் உலகியல் பொருட்களை வாரி வழங்கக் கூடியவர்களை வள்ளல்கள் என்று சொல்லலாம். ஆனால் அருளை அள்ளித் தந்தவர் என்பதால் இவரை “வள்ளலார்” என்று அழைக்கிறோம்.
பசியின் கொடுமை
உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை உணர்ந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை உலகுக்குச் சொன்னவர். ஒருவன் பசியோடு இருக்கும் பொழுது அவனுக்கு எந்தவித கருத்தும் தேவைப்படாது. அவன் பசியைப் போக்கிவிட்டுதான் மற்ற ஆன்மிக விஷயத்தை அவனோடு பேச முடியும். பசியின் கொடுமையை பழம் பாடல் ஒன்று சொல்லும். மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்சிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் பறந்து போம்வயிற்றுப் பசியைவிட கொடுமையான நெருப்பு எதுவும் இல்லை. பசியோடு ஒரு மனிதன் முகத்தைப் பார்க்க முடிவதில்லை. எனவே பசி இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்க வேண்டும். எல்லோருக்கும் சோறிட வேண்டும் என்கின்ற உயர்ந்த லட்சியத்தோடு இருந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை தீர்க்க தானே வழி கண்டார். அதுதான் சத்திய ஞானசபை
அணையா அடுப்பு
1867-ஆம் ஆண்டு பார்வதிபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் 80 காணி நிலத்தை தானமாகப் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க தருமச் சாலையை நிறுவினார் வள்ளல் பெருமான். 1867-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி, இருபத்தி ஒரு அடி நீளம், 2.5 அடி அகலம் இரண்டரை அடி ஆழமுள்ள அணையா அடுப்பு ஏற்படுத்தினார். அன்று எரியத் தொடங்கிய அந்த அணையா அடுப்பு, 154 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. மனிதனின் பசி என்கின்ற நெருப்பு அணைய வேண்டும் என்று சொன்னால், இந்த அணையா அடுப்பு எரிய வேண்டும். இந்த அணையா அடுப்பை எரிய விட்டால் மனிதனின் பசிப்பிணி நீங்கிவிடும். எனவே இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த தர்ம சாலையை ஏற்படுத்தினார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
அவதார புருஷன்
வள்ளலாரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லுகின்ற பொழுது ஜீவன் முக்தர்களுக்கும் அவதார புருஷர்களுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்வார். ஜீவன் முக்தர்கள் தங்களுக்காகவும், தங்கள் ஆத்மாவுக்கும் முயற்சி செய்து பிறப்பில்லாத நிலையை அடைவார்கள். ஆனால் அவதார புருஷர்கள் அப்படியல்ல. இந்த உலகத்தில் உள்ள ஜீவன் களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுப்பார்கள். உலகத்தை காப்பதற்காக பிறப்பு எடுத்தவர் தான் வள்ளல் பெருமான். எனவே அவர் அவதார புருஷன் என்பார்.
பத்துப் பேர் உணவு 100 பேருக்கு
ஒன்று வளர்வதற்கும் தளர்வதற்கும் மனம்தான் காரணம். மனம்போல்தான் அனைத்தும் வளரும். உயர் எண்ணங்களால் எந்த விஷயத்தையும் சாதித்துவிட முடியும். நேர்மறை வார்த்தைகளும் நிஜமான நம்பிக்கையும் நாம் நினைப்பதை எப்படியும் நடத்தும். ஒரு நாள் தருமச் சாலையில் இரவு உணவு நேரம். திடீரென்று பலரும் வந்து விட்டனர். ஆனால் உணவு ஒரு சிலருக்கே போதுமானதாக இருந்தது. இத்தனை பேருக்கும் எப்படி இந்த உணவை வைத்துக்கொண்டு சமாளிப்பது? இனி சமைப்பதற்கு பொருள் இல்லையே? என்று சென்று கேட்டபோது, ‘‘இதோ வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், ‘‘எல்லோருக்கும் இலையைப் போடுங்கள். பார்த்துக் கொள்ளலாம்” என்றார். அவர்தம் கையால் அன்னத்தை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு இலையாக வைத்துக் கொண்டே சென்றார். பத்து இலைகளுக்கு மேல் இந்த அன்னம் போதாது என்று நினைத்தவர்களுக்கு, வந்திருந்த அத்தனை பேருக்கும் அன்னம் போதுமானதாக இருந்தது கண்டு வியந்தனர். காரணம், வள்ளல் பெருமானார் திருக்கரம். அருட் கருணை கரத்தால் உணவைப் பரிமாறியதால், அந்த பாத்திரமே அட்சய பாத்திரமாக மாறியது.
ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆற்றல்
வடலூர் வள்ளல் பெருமான் ஞான புருஷர் மட்டுமல்ல, சித்த புருஷரும்கூட. சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் காட்சி அளிக்கக் கூடியவர்கள். வடலூரில் ஞானசபை கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த காலம் அது. அதற்கு தேவையான மரங்கள் சென்னையில் வாங்க வேண்டும். மரம் வாங்கப் பொறுப்பேற்றிருந்த ஆறுமுக முதலியார், வள்ளல் பெருமான் தன்னோடு சென்னை வந்து மரம் வாங்குவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். “சரி, நீ போ, நான் வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், வடலூரிலேயே தங்கிவிட்டார். ஆறுமுக முதலியார் மகிழ்ச்சியோடு மரங்களை வாங்கிக்கொண்டு வந்தபோது, ‘‘சொன்ன படியே வடலூர் வள்ளல் பெருமான் சென்னையில் வந்து எனக்கு மரம் வாங்குவதற்கு உதவினார்” என்று சொன்னார். மற்றவர்கள் வியந்தனர். “இவர் சென்னைக்கு போகவில்லையே. இரண்டு மூன்று நாட்கள் இங்கே தானே இருந்தார். ஆனால், இவர் சென்னையில் உதவியதாகச் சொல்லுகிறாரே” என்று அவர்கள் சிந்தித்த போதுதான், சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிந்தது.
ஆறு குடம் தண்ணீர்
ஆறு, குளமெல்லாம் நன்னீர் இந்நிகழ்ச்சியைக் கண்ட புதுப்பேட்டை ஊர்க்காரர்கள், தங்கள் ஊரிலும் மழை பொழியாமல் துன்பப்படுவதாக விண்ணப்பிக்க, வள்ளல் பெருமான் அங்கே சென்று, ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் விடுமாறு சொன்னார். அவ்வாறே செய்தனர். அதன் பிறகு புதுப்பேட்டையில் ஆறு கிணறுகளில் நீர் நன்கு ஊறி மேலே வந்தது. அந்நீர் ஏற்கனவே உள்ள நீரைவிட சுவையுடைய நீராக இருந்தது. தொடர்ந்து மழையும் பொழிந்தது.துண்டை வீசி தீயை அணைத்தார்வடலூர் வள்ளல் பெருமான், ஒருமுறை உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென தம் மேல் ஆடையை வீசினார். எதற்காக இவ்வாறு செய்கிறார் என்று அன்பர்கள் திகைத்தனர். ஆனால், சற்று நேரத்தில் ஒரு செய்தி கிடைத்தது. அருகாமையில் உள்ள ஒரு ஊரில் பல குடிசைகள் திடீரென்று தீப்பற்றியது. அது மேலே பயங்கரமாக எரியும் என்று நினைத்தபோது, தீ சட்டென்று எப்படியோ அணைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். அது அணைந்த நேரத்தைக் கணக்கிட்டு பார்த்தபொழுது, அந்த நேரமும் வள்ளல் பெருமான் சடக்கென தம்முடைய மேலாடையை எடுத்து வீசிய நேரமும் ஒன்றாக இருந்தது. இப்படி வள்ளல் பெருமானை பற்றி எண்ணில் அடங்காத பல அற்புதங்கள் இருக்கின்றன. அதில் சிறு துளியே இவை! இன்று வள்ளலாரின் பிறந்த தினம். அவர் கூறிய பொன்மொழிகளை கடைப்பிடித்து, பசியோடு இருக்கும் மக்களுக்கு பசியினை ஆற்றுவோம்.
The post வள்ளலார் ஆற்றிய அரும்பணிகள் appeared first on Dinakaran.