விமானங்கள் மற்றும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காற்றை கிழித்தப்படி வண்ண பொடிகளை தூவி வானில் வட்டமிட்டப்படி சாகச நிகழ்ச்சியை நடத்தின. அதை பொதுமக்கள் தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். விமானப்படை அதிகாரிகள் நாளை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் சென்னை பெருநகர காவல் துறை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காலை 11 மணி முதல் 1 மணி வரை நடந்தது. கடும் வெயில் காரணமாக மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் வானத்தை நோக்கி பார்க்க முடியாமல் மரத்தின் நிழல்களில் தஞ்சமடைந்தனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடைகளுடன் சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். அதேநேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சிறு வியாபாரிகள் பலர் வண்ண குடைகளை ரூ.150 முதல் ரூ.350 வரையிலான விலைகளில் விற்பனை செய்தனர்.
* விஐபிக்கள் அமர ஏசி வசதியுடன் பந்தல் அமைப்பு
விமான சாகச நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்க்க உள்ளனர். இதனால் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட ஷாமினார் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், முழுவதும் ஏசி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
The post இந்திய விமானப்படையின் சாகச முழு ஒத்திகை வானில் வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: மெரினாவில் குடும்பத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.