?ஆத்ம தரிசனம் என்றால் என்ன?
– ஆ.ஜெயசீலிராணி, புதுக்கோட்டை.
நமக்குள் உறையும் இறைவனை உணர்வதே ஆத்ம தரிசனம். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா ஆகிய மூன்று விஷயங்கள் உண்டு. இதில் ஜீவாத்மா என்பது நம்முடைய அசைவுகளையும், அந்தராத்மா என்பது நம்முடைய உள்ளத்து ஆசைகளையும் கட்டுப் படுத்துகிறது. பரமாத்மா என்பதுதான் நமக்குள் உறையும் தெய்வீக சக்தியைக் குறிக்கிறது. அது அன்பு எனும் வடிவில் வெளிப்படுகிறது. உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். அன்பே சிவம் என்று சொல்கிறார்கள் அல்லவா, அதனை முழுமையாக புரிந்துகொண்டாலே நமக்குள் இருக்கும் இறைவனையும் நம்மால் உணர முடியும். இவ்வாறு எல்லோரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் நமக்குள் உறையும் அந்த பரமாத்மாவை அறிந்துகொள்வதே ஆத்ம தரிசனம் ஆகும்.
?வாகனம் ஓட்டும்போது நாய், பன்றி போன்ற மிருகங்கள் மீது ஏற்றிவிட்டால் கெடுதல் ஏற்படுமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நாம் ஓட்டிச்செல்லும் வாகனம் எந்த ஒரு உயிரினத்தின் மீது ஏறினாலும் அதனால் பாதிப்பு உண்டாகிறது எனும்போது அதற்குரிய தோஷம் என்பது வந்துசேரும்தானே. அதற்காக உடனே அந்த வண்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பது தவறு. ஏதோ ஒரு உயிரினத்தின் மீது வண்டியை ஏற்றிவிட்டோம் எனும்போது அந்த விபத்து நம்முடைய கவனக்குறைவால் உண்டாகி இருக்கலாம் அல்லது நம்முடைய நேரம் சரியில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். அது போன்ற நேரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக அந்த நிகழ்வினை எடுத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுநர் பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திப்பார்கள். குறிப்பாக பேருந்து ஓட்டுநர்களிடத்தில் ஒரு பழக்கம் என்பது இருக்கும். அதிகாலையில் பேருந்தை இயக்கத் துவங்கும்போது கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் மீண்டும் இரவு வண்டியைக் கொண்டு வந்து பணிமனையில் நிறுத்தும்போது வழிபாடு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு இறைவழிபாட்டின் மூலம் எந்த கெடுதலும் நேராமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.
?என்னுடைய பெற்றோர்களுக்கு ஆண்டு தோறும் வரும் திவசத்தை சிறப்பாக செய்ய முடியவில்லை. எனக்கு சற்று பண வசதி இல்லை. எளிய முறையில் திவசத்தை எப்படி செய்வது?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. சிரத்தையுடன் செய்ய வேண்டிய ஒரு சடங்கு என்பதால்தான் அதற்கு சிராத்தம் என்று பெயர். இந்த ஆண்டில் கண்டிப்பாக நான் எனது பெற்றோருடைய திவசத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டாலே அதற்குரிய வசதி வாய்ப்பு என்பது தன்னால் வந்து சேரும். எப்படி எளிமையாக நடத்துவது என்று எண்ணுவதை விட எப்படி சிறப்பாக நடத்துவது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னால் வசதி வாய்ப்பு என்பது கூடும். இன்றைய சூழலில் பெரும்பாலும் எல்லோருமே மொபைல் போன் உபயோகிக்கிறோம். வாட்ஸ் அப், ஈமெயில் அனுப்புகிறோம். ரீசார்ஜ் செய்வதற்கு பணம் இருக்கிறது, திவசம் செய்வதற்கு மட்டும் வசதி இல்லையா என்ன? திவசம் என்கிற சடங்கிற்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை.
அதனை அத்தியாவசியமான ஒன்றாக நாம் கருதுவதில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய விஷயங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு முன்னோர் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாருங்கள். தன்னால் வசதி வாய்ப்புகள் என்பது பெருகும். கடன் வாங்கித்தான் சிராத்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லவில்லை. நம்மால் என்ன இயலு மோ அதனைச் செய்தாலே போதும். அந்த நாளில் அவர்களது பெயரைச்சொல்லி நமது கரங்களால் எள்ளும் தண்ணீரும் இறைத்தாலே அது அவர்களுக்கு திருப்தியைத் தரும். அதற்காக நாம் மூன்று வேளையும் வயிறார சாப்பிட்டுவிட்டு முன்னோர்களுக்கு வெறும் எள்ளும் தண்ணீரும் இறைத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. இந்த வருடம் திவசத்தை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னாலே வசதி வாய்ப்பு என்பது நிச்சயமாகப் பெருகும்.
?அஷ்டமி திதியில் ஏன் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
திதி என்பதன் பொருளை முதலில் புரிந்துகொள்வோம். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடைப்பட்ட தூரத்தைச் சொல்வதே திதி ஆகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் சஞ்சரிக்கும் காலம் அமாவாசை என்றும் இந்த இரண்டு கோள்களும் நேரெதிர் பாகையில் சஞ்சரிக்கும் காலம் என்பது பௌர்ணமி நாளாகவும் பார்க்கப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி நாட்களில் சூரியனிடம் இருந்து 90வது பாகையிலும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் 270வது பாகையிலும் சந்திரன் சஞ்சரிக்கும். இந்த நாட்களில்
சந்திரனின் கதிர்வீச்சு என்பது அரைகுறை பலனையே தரும். சந்திரனை மனோகாரகன் என்று ஜோதிடம் சொல்கிறது. மனிதனின் மனம் ஆனது அந்த நாட்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படாது. அரைகுறை மனதுடன் ஒரு செயலைச் செய்யும்போது அதிலே முழுமையான வெற்றி கிடைக்காது என்பதால் அஷ்டமி நாட்களில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
?நான் மீன ராசி. எனக்கு தற்போது ஏழரைச் சனி ஆரம்பித்துள்ளது. வண்டியில் செல்லும்போது இந்த மாதத்தில் மட்டும் இரண்டுமுறை சிறு விபத்து நடந்துள்ளது. சனியின் தாக்கம் இருக்குமோ..?
– ரங்கநாதன், திருச்சி.
முற்றிலும் தவறான சிந்தனை. நீங்கள் நினைப்பது சரி என்றால் வாகன விபத்தினை சந்திப்பவர்கள் அனைவரும் மீன ராசியைச் சேர்ந்தவர்களா அல்லது அவர்கள் எல்லோருக்கும் ஏழரைச் சனி என்பது நடந்து கொண்டிருக்கிறதா, ஏழரைச் சனியின் காலம் நடக்காத மற்ற ராசிக்காரர்கள் யாரும் விபத்தினை சந்திப்பதே இல்லையா என்பதையும் யோசித்துப் பாருங்கள். தெளிவான விடை என்பது கிடைத்துவிடும். மீனராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த மாதத்தில்தான் விபத்தினை சந்தித்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இதற்கு தனிப்பட்ட முறையில் உங்களுடைய ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்தி என்பதுதான் காரணமே தவிர ஏழரைச் சனி என்பது அல்ல. சனி என்கிற கிரகம்தான் உங்களை அந்த விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று எண்ணுங்கள். சனியைத்தான் ஆயுள்விருத்தியைத் தரும் ஆயுஷ்காரகன் என்று ஜோதிடம் உரைக்கிறது. மனசஞ்சலம் நீங்க ஆஞ்சநேய சுவாமியை வணங்குங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.
The post ஆத்ம தரிசனம் என்றால் என்ன? appeared first on Dinakaran.