கும்மிடிப்பூண்டி அருகே இடிந்துவிழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: அகற்றிவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சியில் உள்ள கீமலூர் கிராமத்தில் 1989ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பைப் லைன் வழியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், குடிநீர் தொட்டியின் அடிபாகம், தூண்களில் சிமென்ட் பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், 24 மணி நேரமும் குடிநீர் கீழே வீணாகக் கொட்டுகிறது. அத்தோடு நீர்த்தேக்க தொட்டி அருகே குடியிருப்புகள் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது. தினந்தோறும் கோயிலில் அன்னதானம் அருந்திவிட்டு கை கழுவுவதற்கு இந்த நீர்த்தேக்க தொட்டி அடியில் சென்று கையை கழுவதும், தண்ணீர் குடிப்பதும் வழக்கமாகியுள்ளது. அப்போது பொதுமக்கள் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடனே செல்கின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து புதிதாக அமைக்க வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே இடிந்துவிழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: அகற்றிவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: