தொடர்ந்து, கடந்த செப்.17ம் தேதி திருச்சியில் மண்டல பொறுப்பாளர் பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது, ‘எங்களிடம் ஒவ்வொரு முறையும் பணம் கேட்கும் போது கோடி கோடியாக கொடுத்து உள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பணம் வசூலித்தார். ஆனால் அது அவர்களுக்கு சென்றடையவில்லை. கட்சியில் எங்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை.
தன்னிச்சையாக சீமான் செயல்படுகிறார் விஜயலட்சுமி விவகாரத்தில் மாதம் மாதம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரியில் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அப்போது, ‘செல்வந்தர்களாக இருந்த நாங்கள் கட்சிக்கு சொந்த பணத்தையும், பிச்சை எடுத்தும் செலவு செய்து தினக்கூலியாகிவிட்டோம், ஆனால், சீமான் மாதம் ரூ.2.50 லட்சம் வாடகையில் வீடு, 5 கார், 15 வேலையாள் என சொகுசாக வாழ்கிறார். கட்சியில் யாரையும் மதிப்பதில்லை.
செயற்குழு, பொதுக்குழு கூட்டி அவரே பேசி முடிவெடுத்துவிடுகிறார்’ என குற்றம்சாட்டினர். இந்நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளையும் சிறப்பாக செய்தேன். 2015ல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு, 2018ல் தொகுதி செயலாளராகவும், 2020ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தேன்.
2 நாடாளுமன்ற தேர்தல், 2 சட்டமன்ற தேர்தல், 1 உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் சிறப்பாக வேலை செய்தோம். இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் (சீமான்) பொருட்படுத்தவில்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது, என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள்.
இல்லாவிட்டால் கிளம்புங்கள், உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை, செலவு செய்யவும் கூறவில்லை என்று சீமான் கூறினார். ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில், நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ, பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் தான். இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ‘யாரும் கேள்வி கேட்க கூடாது… இருந்தா இரு, இல்லைன்னா போ…’ சீமானின் அடாவடியால் வெளியேறும் நிர்வாகிகள்: அடுத்தடுத்து விலகுவதால் ஆட்டம் காணும் நாம் தமிழர் appeared first on Dinakaran.