பூவலம்பேடு பகுதியில் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து மறியல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு கிராமத்தில் சீனிவாசன் (35) என்பவர் நீண்ட காலமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தீனா (32) என்பவர், பணமின்றி மளிகை பொருட்களை தரும்படி சீனிவாசனிடம் கூறியுள்ளார். இதற்கு சீனிவாசன் மறுத்ததால், அவரது மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குவேன் என்று தீனா எச்சரித்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சீனிவாசனின் மளிகைக் கடையில் ஒரு மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளார். அந்த குண்டு வெடித்ததில், மளிகைக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் எரிந்து நாசமாகிவிட்டன. இதுகுறித்து பாதிரிவேடு போலீசில் மளிகை கடை உரிமையாளர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது மளிகை கடையை அப்பகுதியை சேர்ந்த தீனா என்பவர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்திய தகவலையும் சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், மளிகை கடையின் பெட்ரோல் குண்டு வீசியவரை பிடிக்கவும், சம்பந்தப்பட்ட நபர்மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று காலை கவரப்பேட்டை-சத்தியவேடு நெடுஞ்சாலையில் பூவலம்பேடு கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதிரிவேடு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம், மளிகை கடைமீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

 

The post பூவலம்பேடு பகுதியில் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து மறியல் appeared first on Dinakaran.

Related Stories: