மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு 8,000 போலீசார் குவிப்பு

சென்னை: இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, மெரினாவில் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினாவில் நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பார்வையிட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர்.

சாகச நிகழ்ச்சி நடைபெறும் 6ம் தேதி அன்று, மெரினா காமராஜர் சாலை, ராஜாஜி சாலை ஆகியவை பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்று தெரிகிறது. மெரினா முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி வரை வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தொலைந்து விடாமல் இருக்க பாதுகாப்பு பட்டைகள் வழங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு பணிக்காக 8 ஆயிரம் போலீசார், 1,500 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடற்கரையை இணைக்கும் சாலைகளான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, அன்னிபெசன்ட் சாலை, பி.வி.ராமன் சாலை, திருவல்லிக்கேணி கோயில் சாலை, சிவானந்தா சாலைகள் என அனைத்தும் சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடையின்றி பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு 8,000 போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: