கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

சென்னை: கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் வாழ்வு உயர்ந்திட கதர் தொழிலுக்கு கை கொடுப்போம் என காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அணிந்து மகிழ்வோம் கதராடைகளை; ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை.!”. தமிழ்நாட்டிலுள்ள கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டினையும், அவர்களது நலன்களையும் கருத்திலே கொண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்திய விடுதலை போராட்டத்தின்போது “அகிம்சை ஆயுதமாக” காந்தியடிகள் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளைத் தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை இராட்டைகளைக் கொண்டு நூல் நூற்பதிலும், கதர் ரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதுமட்டுமல்லாது, கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம் புது வடிவமைப்புகளில் கண்ணை கவரும் வண்ணத்தில் நெசவு நெய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராம பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு தூண்டுகோலாய் துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

அதன்படி, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கதர் பருத்தி, கதர் பாலியஸ்டர் மற்றும் கதர் பட்டு ரகங்களை வழங்க வேண்டுமென்ற நோக்கில் ஆண்டு முழுவதும் 30 விழுக்காடு விற்பனை தள்ளுபடியை அரசு அனுமதித்துள்ளதால், ஆண்டு முழுவதும் தள்ளுபடி விலையில் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், காந்தியடிகளின் 156வது பிறந்த நன்னாளை ஒட்டி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டுமென மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: