தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசியின் தற்காலிக குழுவை அமைக்கும் மத்திய குழுவின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (ஐஎன்டியுசி)க்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கிளைகள் உள்ளன. பிரேதச யூனியன் என்ற பெயரில் செயல்படும் இந்த யூனியனுக்கு ஐஎன்டியுசி சட்ட விதிகளின்படி நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2022 ஆகஸ்ட் 7ம் தேதி மதுரையில் நடந்த யூனியனின் மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தமிழ்நாடு ஐஎன்டியுசியின் தலைவராக வி.ஆர்.ஜெகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐஎன்டியுசி சட்ட விதிகளின்படி மற்ற நிர்வாகிகளை நியமிக்க தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் ராயபுரத்தை சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் செகரட்டரி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 3 மூத்த துணை தலைவர்கள், 5 துணை தலைவர்கள், 5 பொது செயலாளர்கள், 5 செயலாளர்கள், ஒரு பொருளாளர் என மொத்தம் 21 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இந்த பதவிகளில் ஆகஸ்ட் 2025 வரை செயல்படுவார்கள்.
இந்நிலையில், ஐஎன்டியுசியின் தேசிய தலைவர் கடந்த செப்டம்பர் 6ம் தேதி தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு தற்காலிக குழுவை நியமித்து அறிவிப்பாணை வெளியிட்டார்.

அந்த தற்காலிக குழுவுக்கு தலைவராக வி.ஆர்.ஜெகநாதன் நியமிக்கப்பட்டார். செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தமிழ்நாடு ஐஎன்டியுசியின் செகரட்டரி ஜெனரல் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் 2025 ஆகஸ்ட் வரை இருக்கும்போது யூனியனின் சட்ட விதிகளுக்கு முரணாக தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு விதிகளுக்கு முரணாக செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்ற வழக்குகள் உள்ளவர்கள் அந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, தற்காலிக குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாநில குழு விதிகளின் படி தேர்வு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியில் இயங்கும்போது யூனியனின் சட்ட விதிகளுக்கு முரணாக தற்காலிக குழுவை அமைக்க முடியாது. எனவே, தற்காலிக குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: