சென்னை: ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தில் உரிமம் பெறாமல் சென்னையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்த 10 நிறுவனங்களில் பெருநகர காவல்துறையுடன் இணைந்து குடியேற்றத்துறை நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஏஜென்ட்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கணினி, தட்டச்சு மற்றும் ஆங்கில மொழி புலமை வாய்ந்த நபர்கள் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனங்கள் மூலம் செல்கின்றனர்.
அப்படி தமிழ்நாட்டில் இருந்து பலர் மோசடி நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களுக்கு ஊதியத்துடன் தங்கும் இடம் வழங்கி, கம்பி வேலி போடப்பட்ட கட்டிடங்களில் அடைத்து வைத்து, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து, பெடேக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்டவிரோத கடன் வழங்கும் செயலி மோசடி, திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகள் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இதுபோன்ற மோசடி நபர்கள் மூலம் வெளிநாடுகளில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்று கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் 1039 பேர் சிக்கி தவிர்த்து வருகின்றனர். இவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை மூலம் தேசிய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கிடையே பெரும்பாலான நபர்கள் சென்னையில் உள்ள ஏஜென்ட்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவதை தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டிற்கான குடியேற்றப்பிரிவு அதிகாரிகள், சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுவரை இல்லாதவகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு சோதனையில், 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து, சென்னை முழுவதும் சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 10க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், தமிழ்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகளை வேலைக்கு அனுப்பியதாக தனித்தனியாக மோசடி ஏஜென்ட்கள் மீது 9 வழக்குகள் பதிவு செய்து சையது முகமது சைபுதீன், கார்த்தி பாபு, மகேஸ்வரன், ஈசா மரிய பாபு, ராம்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களும், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமீறல்கள் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் வேலை தேடும் நபர்களை குறிவைத்து இந்த சட்ட விரோத ஏஜென்ட்கள் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த ஏஜென்ட்கள், மிக அதிக அளவுக்கு பணம் பெற்று சில சமயங்களில் விசா மற்றும் பணி நியமன பர்மிட்டுகள் வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ உரிமம் பெறாமல், எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்தியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடியாது. விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் ஒரே நேரத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் மற்றும் பெருநகர போலீசார் இணைந்து நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post வெளியுறவு அமைச்சகத்தில் உரிமம் பெறாமல் பொறியாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிய 10 நிறுவனங்களில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.