சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , திருச்சி மண்டலப் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் குறித்து. இன்று(26.09.2024) சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பணிகள், பொதுப்பணித்துறையின் அறிவிப்புகள் மற்றும் இதர துறையின் அறிவிப்புகளில், நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள், நிலுவையிலுள்ள அறிவிப்பு பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை கேட்டறிந்த அமைச்சர் , நிலுவையிலுள்ள அறிவிப்பு பணிகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் , ஆய்வுக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து பொறியாளர்களையும் வரவேற்று, ஆய்வுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்து, உரையாற்றுகையில், எந்த கட்டுமானப் பணியானாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கண்காணிப்புப் பொறியாளர்கள், பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, ஆய்வுக் குறிப்புகளைப் பதிவு செய்திட வேண்டும் என்றும், பொதுப்பணித்துறையின் தரக்கட்டுப்பாட்டுக் கோட்ட பொறியாளர்கள், அனைத்து கட்டடப் பணிகளையும் அவசியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, குறித்த காலத்தில் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்தலில் பயன்பாட்டு துறையிடம் அவர்களுடைய தேவையை கேட்டறிந்து, அதன்படி வரைப்படம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், கட்டடம் கட்டுவதற்குமுன் திட்ட உருவாக்க நிதியைப் பயன்படுத்தி மண் பரிசோதனை செய்து, மண் தன்மைக்கு ஏற்றவாறு கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதன் மூலம் திருந்திய நிர்வாக அனுமதியினை தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார். மேலும், கட்டடக் கலைஞர்கள் கட்டட வரைபடங்கள் தயாரிக்கும்போது, கட்டடங்களில் அமைக்கப்படும் கழிவுநீர் குழாய்கள் வெளியேறும் பகுதி, மின் அமைப்புகள் உள்ள பகுதிகளில் கான்கிரிட் போன்ற அமைப்புகள் சரியான முறையில் வடிவமைக்க வேண்டும் என்றும், கட்டடங்களில் நீர்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான வாட்டர் ப்ரூப் நடைமுறைகளை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்றும், எம்-சாண்ட் சுவர் பூச்சு பயன்பாட்டிற்கு தேவையான கெமிக்கல் கலவை பயன்படுத்த வேண்டும் என்றும், மின் பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து, மின் கசிவு ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அமைச்சர் அறிவுறுத்தினார். புதிய முத்திரைத்திட்ட கட்டடப் பணிகளில், பசுமைக் கட்டடம்(Green Building Concept) வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் உரையாற்றியபின், பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத்தின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து கட்டடப் பணிகளையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் , அறிவுக்கப்பட்ட திருச்சியில் அமையவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டட மதிப்பீடு உடனடியாக சமர்ப்பித்து, பணிகள் தொடங்கிட அறிவுரைகள் வழங்கினார். ரூ.110 கோடி மதிப்பீட்டில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம், ரூ.42 கோடி மதிப்பீட்டில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ.25 கோடி மதிப்பீட்டில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ரூ.45.50 கோடி மதிப்பீட்டில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ரூ.34 கோடி மதிப்பீட்டில், கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் ஆகிய கட்டடப் பணிகள் குறித்து, அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, தலைமைக் கட்டடக் கலைஞர் இளவேண்மாள், திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் செந்தில், சிறப்பு பணி அலுவலர் இரா.விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை கூட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Related Stories: