பள்ளிப்பட்டில், மாற்று இடம் தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை

திருத்தணி, செப். 26: பள்ளிப்பட்டில், மாற்று இடம் தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகில் வாரச்சந்தை மைதானம் உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை வார சந்தை நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை வார சந்தை குத்தகை உரிமம் பொது ஏலம் மூலம் விடப்படுகிறது. தனிநபர் குத்தகை உரிமம் பெற்று வார சந்தையில் வியாபாரிகளிடம் தண்டல் வசூல் செய்யப்படுகிறது. இந்த வார சந்தையின் மூலம் விவசாயிகள், சிறு வியாபாரிகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகள் உள்ளிட்டவைகளை இங்கு வியாபாரம் செய்கின்றனர். சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில மாதங்களாக வார சந்தை அமைக்கும் இடத்தை ஆக்கிரமித்து 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தார் அங்கேயே தங்கி சமையல் செய்து உண்டு, உறங்கி வருகின்றனர். இதனால், வாரச்சந்தையின் போது வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், சுகாதாரமின்றி சீர்கேடு ஏற்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நேற்று நரிக்குறவர்களை வார சந்தையில் இருந்து வெளியேற்றினர். இதனால், ஆத்திரம் அடைந்த நரிக்குறவர்கள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து, தாசில்தார் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் விரைவில் மாற்று இடம் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதுவரைக்கும் தற்காலிகமாக வார சந்தை மைதானத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் சந்தை பகுதியான இடத்தை சுத்தமாகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

The post பள்ளிப்பட்டில், மாற்று இடம் தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: