ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது?.. சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை


சென்னை: சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980ம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்தார். சமீபத்தில் இந்த நிலத்தை இசி செய்து பார்த்தபோது எனது தந்தை, இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல காட்டுகிறது. எனக்கு எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார்.

ஆனால் 1987ல் எனது தந்தை, அந்த நிலத்தை காந்தம்மாளுக்கு எழுதிக் கொடுத்ததுபோல ஆவணங்களை தயார் செய்து, போலியாக பதிவுத்துறை ஆவணங்களில் ஏற்றியுள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ10 கோடி. இதனால், ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாக இடைச்செருகல் மூலம் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலியாக பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், உத்தரவிட்டிருந்தார். விசாரணையில் புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என்று தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு பதிவுத்துறை ஐஜி கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி ஐஜி அன்பு உத்தரவின்பேரில், எஸ்பி வினோத் சாந்தாராம், டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணையில், தற்போது சேலம் பதிவுத்துறை டிஐஜியாக இருந்த ரவீந்திரநாத், தென் சென்னை உதவி ஐஜியாக பணியாற்றியபோதுதான், இந்த தவறு நடந்திருப்பதும், அவரே அதில் விரல் ரேகை பதிந்து லாகின் செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அதைத் ெதாடர்ந்து, தற்போது சேலத்தில் டிஐஜி அலுவலத்தில் பணியில் இருந்த ரவீந்திரநாத்தை, டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது?.. சிபிசிஐடி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: