ஆக்கிரமிப்பு அகற்றும்போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர் நாவலூரில் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, படூர், முட்டுக்காடு ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் உருவாகி உள்ளன. இந்நிலையில், நாவலூர் ஊராட்சியில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும், தாழம்பூர் ஊராட்சிக்கும் இடையே உள்ள சாலையானது செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

மேலும், இந்த சாலையில் தினமும் ஏராளமான தண்ணீர் லாரிகளும், சிமெண்ட் ஏற்றிச்செல்லும் லாரிகளும், கல்லூரி பேருந்துகளும் சென்று வருகின்றன. இதனால் காலை முதல் இரவு வரை தாழம்பூர் சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இதையடுத்து இச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து இருந்தது. நாவலூர் சந்திப்பில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதை நம்பி 100க்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள யாரும் முன் வராததால் நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சண்முகப்பிரியன் தலைமையில் வருவாய்த்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.

இதனால், தாழம்பூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாவலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜாராம், புதிய புரட்சி கழகம் என்ற கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலர் செல்வம், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், குடியிருப்புவாசிகள், கடைக்காரர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று கூறினர். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சீனிவாசன் என்பவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

The post ஆக்கிரமிப்பு அகற்றும்போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற வாலிபர் நாவலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: