அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் பரந்தூர் விமான நிலைய அறிக்கையை வெளியிட வேண்டும் விவசாய சங்க கூட்டத்தில் கோரிக்கை

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய தொடர்பான அறிக்கையை அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் வெளியிட வேண்டும் என்று விவசாய சங்க கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பரந்தூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் செட்டியார்பேட்டை சிஐடியூ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பி.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து ஆய்வுசெய்ய அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஆய்வறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அதை வெளியிடாமல் அரசு வைத்திருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். உடனடியாக அந்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. மேலும், வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடும் தமிழ்நாடு அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், முதல் கட்டமாக விமான நிலைய திட்டத்தில் பாதிக்கப்படும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்கும், பொதுமக்களும் அவரவர் வீடுகளில் அக்டோபர் 13ம்தேதி கருப்பு கொடியேற்றி கண்டனத்தை வெளிப்படுத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தெரிவிக்குமாறு கூட்டம் கேட்டுக்கொள்கிறது. பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் கன்வீனராக கே.நேரு நியமிக்கப்பட்டார் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன் மற்றும் 8 கிராமங்களில் இருந்து விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் பரந்தூர் விமான நிலைய அறிக்கையை வெளியிட வேண்டும் விவசாய சங்க கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: