4 தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அங்குள்ள குடிநீர் தொட்டியானது பழுதடைந்து உள்ளதால் அதை பயன்படுத் முடியாமல் இருந்தது. இதனால் குடிநீர் தேவை அறிந்து செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ரா.அறிவழகி ராஜி திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

உடனடியாக பானம்பாக்கம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 – 2023ம் ஆண்டு எஸ்விஎஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூ.32 லட்சத்தில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டவும் மற்றும் பைப் லைன் குழாய் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 14.07.2022 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பின் ஜான் வர்கீஸ் உத்தரவால் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 4 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு பணி தொடர்ந்து நடக்காமல் 2 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் தண்ணீர் இல்லாமல் இன்னும் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து நேற்று முன்தினம் 22ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு 4 தூண்கள் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் 4 தூண்களிலும் படர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றிவிட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை தொடங்கினர்.

The post 4 தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: