களக்காடு: களக்காடு அருகே இரை தேடி கோயிலுக்குள் புகுந்த கரடி, அங்கிருந்து எண்ணெய்யை குடித்துச் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், சிங்கவால் குரங்கு, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் இரை தேடி அலைந்தும் கிடைக்காத விரக்தியில் மலையடிவார பகுதிக்கு ஏராளமான கரடிகள் இடம் பெயர்ந்துள்ளது. அவை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன.
இந்நிலையில் களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன் குளம் கிராமத்துக்குள் நேற்று அதிகாலை கரடி ஒன்று புகுந்தது. பின்னர் அந்த கரடி அங்குள்ள உய்க்காட்டு சுடலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த விளக்கேற்றும் எண்ணைய்யை குடித்துள்ளது. பின்னர் அங்கிருந்து வெளியேறியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘களக்காடு பகுதியில் ஏராளமான கரடிகள் ஊருக்குள் புகுந்துள்ளன.
குறிப்பாக சிங்கிகுளம், திருக்குறுங்குடி, சிதம்பரபுரம், களக்காடு கக்கன் நகர், பெருமாள் குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரடிகள் அடிக்கடி நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கரடிகள் நடமாட்டத்தால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் புகுந்துள்ள கரடிகளை பிடிக்க வனத்துறையினர் இரும்புக் கூண்டுகள் வைக்க வேண்டும் என்றனர்.
