சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் (e-scooter) இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நல உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு அரசால் 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம், மாதந்திர ஓய்வூதியம் போன்ற நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் இதர 18 நலவாரியங்களில் தற்போது 22,21,116 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். வாரியங்கள் துவங்கப்பட்டது முதல் இதுவரை 47,07,977 பயனாளிகளுக்கு 2,341 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2025 வரையிலான காலங்களில் 7,57,104 அமைப்புசாரா தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். இக்காலகட்டத்தில் 1,210 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 12,26,530 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 60 வயது பூர்த்தியடைந்த பதிவு பெற்ற 2,07,260 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1200/- வீதம் ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,333 பெண் / திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் ரூபாய் ஒரு இலட்சம் வீதம் மானியமாக 23.33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இணைய சார்ந்த சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் (Gig Workers) நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்களால் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform based Gig Workers Welfare Board) 26.12.2023 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் 23,687 இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையிலும், கைபேசிக்கு மின்னூட்டம் (Charging) செய்வதற்கும், கழிப்பறை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனத்திற்கு ரூ.5 இலட்சம் வரையிலான குழு காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்கும் செலவினத்தில் ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
