கோயம்பேடு மார்க்கெட்டில் கழுவி சுத்தப்படுத்தி விற்பனை செய்த அழுகிப்போன காய்கறிகள் பறிமுதல்


அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகாமல் அழுகிய நிலையில் கொட்டப்படும் காய்கறிகளை சிலர் எடுத்துச் சென்று கழுவி சுத்தப்படுத்தி மீண்டும் விற்பனை செய்து வந்தனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை குறைந்த விலைக்கு ஓட்டல்காரர்களும் நடுத்தர மக்களும் வாங்கி சென்றனர். மேலும் கோயம்பேடு பகுதியில் உள்ள சாலையோர டிபன் கடைகளில் இவ்வாறு வாங்கப்படும் காய்கறிகளைத்தான் நீண்டகாலமாக பயன்படுத்திவந்தனர். இதனால் இவற்றை சாப்பிடுகின்றவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில், வீணான, அழுகிய காய்கறிகளை விற்பனை செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பெரிய கோணிப்பையின் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகளை ஆய்வு செய்தபோது வீணாகிப்போன அழுகிய காய்கறிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்காடி குழு ஊழியர்கள் வந்து அழுகிப்போன காய்கறிகளை பறிமுதல் செய்து அங்குள்ள குப்பையில் கொட்டினர்.

இதுகுறித்து அஙகாடி நிர்வாகம் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாய் போன காய்கறிகளை குப்பையில் போடுகின்றனர். அவற்றை சிலர் சேகரித்து பின்னர் அவற்றை நன்றாக கழுவி விற்பனை செய்து விடுகின்றனர். தற்போது மார்க்கெட்டில் ஆய்வு செய்து வீணாய் போன காய்கறிகளை விற்பனை செய்தவர்களை எச்சரித்துள்ளோம். பறிமுதல் செய்த காய்கறிகளை குப்பையில் போட்டுவிட்டோம். இதுபோல் சம்பவங்கள் நடந்தால் அங்காடி நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்’ என்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் கழுவி சுத்தப்படுத்தி விற்பனை செய்த அழுகிப்போன காய்கறிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: