ஆவடி மாநகராட்சியின் ‘எக்ஸ்’ வலைதளத்தில் நடிகர் விஜய் கட்சியின் மாநாடு பற்றிய பதிவு: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி; ரீ போஸ்ட் உடனடி நீக்கம்

ஆவடி: ஆவடி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியான விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றிய பதிவால் சர்ச்சை எழுந்தது. இதனால் தவறுதலாக ‘ரீ போஸ்ட்’ செய்யப்பட்ட பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் கொடியை, விஜய் அறிமுகப்படுத்தினார். தவெகவின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் அக். 27ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்த அறிவிப்பை, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நேற்று காலை 10.00 மணியளவில், கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பதிவிட்டுருந்தார். இந்நிலையில், விஜயின் அந்த அறிவிப்பை, ஆவடி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் மறுபதிவு (ரீ போஸ்ட்) செய்யப்பட்டது. ஆவடி மாநகராட்சியின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இது ஒருபுறம் இருக்க, இதை அறிந்த விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் ஆரவாரம் செய்தனர். அதன் பின், இன்று மதியம் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தவறுதலாக பதிவிட்டதாக கூறி அந்த பதிவை நீக்கினர். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது.

The post ஆவடி மாநகராட்சியின் ‘எக்ஸ்’ வலைதளத்தில் நடிகர் விஜய் கட்சியின் மாநாடு பற்றிய பதிவு: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி; ரீ போஸ்ட் உடனடி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: