நெல்லிக்குப்பம் அருகே மோதலில் ஈடுபட்ட ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

 

நெல்லிக்குப்பம், செப். 20: நெல்லிக்குப்பம் அருகே மோதலில் ஈடுபட்ட ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணா கிராம ஒன்றியம் கொங்கராயனூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு மொத்தம் 69 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பாக்கியலட்சுமி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் ஜெயந்தி மாலா, கௌசல்யா என 2 ஆசிரியர்கள் உள்ளனர்.

நேற்று தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி வரும் காலாண்டு தேர்வுக்கான வினா விடை பேப்பர் வாங்கி வர கடலூர் பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காலை பிரார்த்தனைக்கு மாணவர்களை அழைப்பதில் ஆசிரியர்களான கௌசல்யா, ஜெயந்திமாலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் ஆவேசமாக திட்டிக் கொண்டதாக தெரிகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியை ஜெயந்திமாலா, கௌசல்யா கன்னத்தில் அறைந்து விடுவேன் என எச்சரிக்கவே, சத்தம்கேட்டு அங்குவந்த பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவர்கள் முன்பு இதுபோன்று ஆசிரியர்கள் மோதலில் ஈடுபடுவது குறித்து வேதனை தெரிவித்தனர். மேலும் ஆசிரியை ஜெயந்திமாலாவை பணியிடை மாற்றம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மறியலும் செய்தனர்.

தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரசு பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post நெல்லிக்குப்பம் அருகே மோதலில் ஈடுபட்ட ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: