கடலூரில் பரபரப்பு: மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

கடலூர், டிச. 30: கடலூரில் தனியார் பன்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர்-சிதம்பரம் சாலையில் மோகினி பாலம் அருகே தனியார் பன்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. 9 தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளானது. மேலும் ஊழியர்களும், நோயாளிகளும் பதற்றம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் போலீசாருடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

மேலும் மருத்துவமனை வளாகம் மற்றும் உட்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் மருத்துவமனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் இது புரளி என்று தெரியவந்தது. இதன் பிறகே மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூரில் பரபரப்பு: மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: