வீடூர் அணையில் உபரி நீர் திடீரென திறப்பு: ஆபத்தை உணராமல் படுகை அணையில் விளையாடும் பொதுமக்கள்

 

திருக்கனூர், டிச. 30: வீடுர் அணையில் திடீரென உபரிநீர் திறக்கப்பட்டதால் திருக்கனூர் அருகே படுகை அணை நிரம்பி வழிந்தோடுகிறது. அதில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள், மாணவர்கள் விளையாடுவதை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணி- கைக்கிலப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணையுடன் கூடிய மேம்பாலம் உள்ளது.

பாலம் கட்டுவதற்கு முன், சுத்துக்கேணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பழைய படுகை அணை இருந்து வந்தது. அந்த படுகை அணை தற்போது பாழடைந்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை மற்றும் புயலால் ஏரி, குளங்கள் நிரம்பி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் சங்கராபரணி ஆற்றின் வழியாக வந்து சுத்துக்கேணி படுகை அணை நிரம்பி பழைய படுகை அணையில் வழிந்து ஓடியது.

ஆபத்தான பயணம் என்பதால் யாரும் அங்கு செல்லாமல் போலீசார் தடுத்து நிறுத்தி வந்தனர். படுகை அணையில் தண்ணீர் வழிந்து ஓடியதால் பொதுமக்களும், மாணவர்களும் அதில் விளையாடினர். அதன்பிறகு படுகை அணையில் நீர் குறைந்து தண்ணீர் இல்லாமல் இருந்தது. நேற்று, திடீரென வீடூர் அணை திறப்பால் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு படுகை அணை நிரம்பி வழிந்து ஓடியது.
இந்த எழில்மிகு காட்சி ரம்மியமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் படுகை அணைக்கு சென்று குளித்து விளையாடினர்.

நேற்று காலை முதல் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் கூட்டம் அங்கு அலை மோதியது. இதனால் அந்த படுகை அணை, சுற்றுலாதலம் போல் காட்சியளித்தது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக படுகை அணையை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேண்டும். மேலும், அடிக்கடி உபரிநீர் திறப்பதால் எந்த நேரத்தில் எந்த அளவு நீர் திறக்கப்படுவது என்று தெரியாமல் பொதுமக்கள் சிக்கிக் கொள்வதால், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைத்து பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீடூர் அணையில் உபரி நீர் திடீரென திறப்பு: ஆபத்தை உணராமல் படுகை அணையில் விளையாடும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: