பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம் கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்: அன்புமணி பேட்டி

திண்டிவனம்: .வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு உயிரிழந்தவர்களின் நினைவாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் தியாகிகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் வன்னியர் சங்க கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றிவைத்தார்.  தொடர்ந்து, பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள அவரது சிலைக்கு ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பாமக பயிலரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘தந்தை பெரியாரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக. பெரியார் சமூக நீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சாதிவாரி கணக்கெடுப்பாக 45 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. கலைஞர் இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்’ என்றார்.

* பாமகவினர் மோதல் -அடிதடி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் பாமக தலைவர் அன்புமணி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் கடலூர்- புதுச்சேரி வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அன்புமணி கார் பின்னால் பாமகவினருக்குள் இருபிரிவாக போட்டி போட்டு வந்தபோது 2 கார்கள் உரசியதால் சலசலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணிக்காக வந்த ஆயுதப்படை போலீசார் மோதலில் ஈடுபட்ட பாமகவினரை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

The post பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம் கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: