நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு

சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் திமுகவினர் பந்தலை அடைய வரவேண்டிய வழிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறும் முப்பெரும் விழா மற்றும் பவள விழாவிற்கு வருகை தர மொத்தம் 6 வழிகள் உள்ளன. இந்த 6 வழிகளிலும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 8 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் மேடையில் அமரும் சிறப்பு அழைப்பாளர்கள் அண்ணாசாலை வழியாக வந்து காஸ்மோபாலிடன் கிளப் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பச்சைப் பந்தல்’ வழியாக இடதுபுறத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு பந்தலை வந்தடையலாம்.

திமுக மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அண்ணாசாலை வழியாக வந்து காஸ்மோபாலிடன் கிளப் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பச்சைப் பந்தல்’ வழியாக இடதுபுறத்தில் உள்ள Man Hockey Ground-ல் வாகனங்களை நிறுத்திவிட்டு பந்தலை வந்தடையலாம். வடசென்னையிலிருந்து அண்ணாசாலை வழியாக வேன்களில் வரும் திமுகவினர் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் இறங்கிக்கொண்டு, அருகில் உள்ள தாடண்டர் நகர் B-விளையாட்டு மைதானம் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, பந்தலை வந்தடையலாம். இ.சி.ஆர். வழியாக வரும் நாகை, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம் வழியாக வரும் திமுகவினர் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் இறங்கிக் கொண்டு, கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மற்ற முக்கிய விஐபிக்கள் தாங்கள் வரும் வாகனங்களை பெண்கள் ஹாக்கி கிரவுண்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு, நேரிடையாக விழா நடைபெறும் இடத்திற்கு வந்தடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிண்டி, சைதாப்பேட்டை வழியாக வந்து தாடண்டர் நகர் மைதானம் மற்றும் கடற்படைக்குச் சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பந்தலை வந்தடையலாம். சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை மேற்கு மாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் நந்தனம், அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடையலாம். இரண்டு சக்கர வாகனங்களில் வருகை தருவோர் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஜிம் மைதானத்தில் இடது மற்றும் வலது புறத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பந்தலை வந்தடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: