பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உயிர்ப்பலியை தடுக்க புதிய முயற்சி

*குளிக்க பாதுகாப்பான இடம் குறித்து நோட்டீஸ் வழங்கல்

விகேபுரம் : பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உயிர்ப்பலியை தடுக்க புதிய முயற்சியாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு வரும் பக்தர்கள் பரிகாரம், நேர்த்திக்கடன் செலுத்துவதோடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதே போன்று அகஸ்தியர் அருவி, காரையாறு கோயில் முன் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நதியில் ஆழம் தெரியாமல் குளிப்பதாலும், அதோடு ஆங்காங்கே அரசு மற்றும் தன்னார்வலர்களால் வைக்கப்பட்ட உயிர்பலி தடுப்பு விழிப்புணர்வு பலகைகளை படிக்காததாலும் நீரில் மூழ்கி உயிர்பலி ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, பாபநாசம், அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி தலைமையில் உயிர்பலி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பாபநாசத்தில் வைத்து நடந்தது.
இதில் வெளியூரிலிருந்து கார், வேன், பஸ் மூலம் பாபநாசத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் நோட்டீஸ் வழங்கியும், பதாகைகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாபநாசம் கோயில் முன்பு, அதை சுற்றியுள்ள மண்டபங்கள், பாபநாசம் சோதனைச்சாவடி, நகராட்சி வேன், கார் நிறுத்துமிடம், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள், படித்துறை பகுதிகளில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நோட்டீசில் பாபநாசம், அகஸ்தியர்அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், கல்யாண தீரத்தம் மற்றும் அதை சுற்றிய தாமிரபரணி ஆற்றில் எங்கு குளிக்க வேண்டும்?, எங்கு குளிக்க கூடாது?, பாதுகாப்பான இடம் எது?, பாதுகாப்பற்ற இடம் எது?, எங்கு இழுப்பு, சுழல், ஆழம் உண்டு?, அதிக உயிர்பலியான இடம் எது? என்பது போன்ற தெளிவான விழிப்புணர்வு விவரங்கள் இடம்பெற்றிருந்தது. நேற்று மட்டும் ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதே போன்று இனி வரும் வாரங்களில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் அந்த நாட்களில் நோட்டீஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் சுதர்சன், மலை, துரை, சந்தோஷ், வெற்றிவேல், அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு அளித்தனர்.

The post பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உயிர்ப்பலியை தடுக்க புதிய முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: