ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டபோது நான் இல்லை என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்

 

*பாஜவில் நீக்கப்பட்ட நிர்வாகி பரபரப்பு பேட்டி

கோவை : அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட இடத்தில் நான் இல்லை என்றும், மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி கூறினார். கோவையில் கடந்த 11ம் தேதி கொடிசியா வளாகத்தில் தொழில் துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு தொழில் துறையினர் அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசியது வைரலான நிலையில், அது குறித்து அவர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வலைதளங்களில் பரவியது. அதற்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரத்தை பயன்படுத்தி பாஜ மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது என கண்டனங்களை எழுந்தன. இந்த வீடியோவை சிங்காநல்லூர் மண்டல பாஜ தலைவர் சதீஷ் என்பவர் வெளியிட்டதாக கூறி அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் பாஜ நீக்கியது. இந்நிலையில், இது குறித்து நிருபர்களுக்கு சதீஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் 20 ஆண்டுகளாக பாஜவில் இருக்கிறேன். கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை படிப்படியாக பொறுப்பு வகித்துள்ளேன். இதுவரை என் மீது சின்ன குற்றச்சாட்டு கூட இல்லை. ஆனால் அன்னபூர்ணா ஓனர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் என்னை நீக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் நடந்தது என்னனா? மன்னிப்பு கேட்டது பர்சனல் மீட்டா தான் நடந்தது. அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும்போது அந்த இடத்தில் நான் இல்லை.

அங்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் பாஜ கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மட்டும்தான் இருந்தனர். அந்த வீடியோவில் மூன்று பேர் இருக்காங்க. மாவட்ட தலைவர் மட்டும்தான் இல்லை. எனவே, அந்த வீடியோ யாரால் எடுக்கப்பட்டது என்று இதிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவரே மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்ற நிலையில், இந்த வீடியோ எனக்கு வந்துச்சு… இது உண்மையா என்று பாஜ நிர்வாகிகள் குழுவில் பகிர்ந்து கேட்டேன். அந்த வீடியோவை பகிர்ந்ததால்தான் என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

இது கட்சி விரோத நடவடிக்கை என்றால் இந்த வீடியோவை ரிலீஸ் பண்ணது யார்?. வீடியோவை வெளியிட்டவர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா? அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமைதான் முடிவெடுக்கும். ஆனால் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் என்னை சம்பந்தம் இல்லாமல் பலிகடா ஆக்கிவிட்டனர். அந்த வீடியோவை எடுத்த மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மீது மாநில கமிட்டி ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டபோது நான் இல்லை என்னை பலிகடா ஆக்கிவிட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: