மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவரை, இதே கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த தூத்துக்குடி சிப்காட்டை சேர்ந்த செபாஸ்டின் (40), பால்ராஜ் (40) ஆகியோர் நள்ளிரவில் செல்போனில் தொடர்பு கொண்டு ‘மது குடிக்கலாம் வர்றீயா?’ என்றும், ஆபாசமாக வரம்பு மீறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இரு பேராசிரியர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பேராசிரியர்களின் செல்போன் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் 2 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவியிடம் புகாரை வாபஸ் பெறுமாறு பேராசிரியர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில் பாளை போலீஸ் நிலையத்தில் பேராசிரியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை மாணவியின் பெற்றோர் வாபஸ் பெற்றனர். இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக பரவியதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை. போலீசார் வழக்கு பதிந்து தூத்துக்குடி சிப்காட்டை சேர்ந்த பேராசிரியர் செபாஸ்டினை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கல்லூரி நிர்வாகம், இரு பேராசிரியர்களையும் நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டு உள்ளது.

The post மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Related Stories: