இந்த வார விசேஷங்கள்

திருக்குறுங்குடி அழகிய நம்பி திருப்பவித்ரோத்சவம் 7 நாள் 14.9.2024 – சனி

நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி. 1500 வருடம் பழமையானது. வராஹப் பெருமான் தனது பிரம்மாண்டமான உருவத்தைக் குறுக்கிய தலம் என்பதால் திருக்குறுங்குடி ஆயிற்று. பூமிப்பிராட்டி கைசிக மஹாத்மியத்தை இத்தலத்தில் உபதேசம் பெற்று, பின் பூவுலகில் ஆண்டாளாக அவதரித்துப் பெருமாளின் பெருமையைப் பரப்பியதால், ஆண்டாளின் அவதார காரணத் தலம் திருக்குறுங்குடி. இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சந்நதி இல்லை.

திருமங்கை ஆழ்வார் பரமபதம் அடைந்த தலமும் இதுவே. இப்படிப்பட்ட தலத்தில் திருப்பவித்ரோத்சவம் 7 நாட்கள் நடக்கிறது. பவித்ரோத்ஸவம் என்பது புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும் போதும் மற்றும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி 14.9.2024 – சனி

வாமன அவதாரத்தை ஒட்டி வருகின்ற ஏகாதசி விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி. இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார் என்பதால், அவசியம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் என்பது மிகவும் எளிமையான விரதம். பிரத்தியேகமாக ஸ்ரீ மன் நாராயணனை வழிபடவேண்டிய விரதம். எங்கும் நிறைந்து இருக்கக்கூடிய மஹாவிஷ்ணுவின் பூரணமான அனுக்கிரகத்தை பெற்றுத் தரும் இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக் கலாம். ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, ஸ்ரீ மத்பாகவதம் விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர். ஏகாதசி விரதம் துவாதசி பாரணையோடு தான் முடிகிறது. இந்த துவாதசி, சகல வெற்றிகளையும் கொடுப்பது என்பதால் விஜய துவாதசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மாதபிறப்பு, ஷடசீதி புண்ணிய காலம் 17.9.2024 – செவ்வாய்

வருடத்தில் நான்கு மாதங்கள் ‘ஷடசீதி புண்ணிய காலம்’ என்று அழைக்கப்படுகிறது. அவை ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாத ஒன்றாம் தேதி. ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவசக்தி வழிபாடு, சித்தர்கள்வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும். இது புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது பகவான் கிருஷ்ணரின் திருவாக்கு.

பகவான் மகா விஷ்ணுவை ஆராதிப்பதற்காகவே அமைந்த மற்றொரு மாதம் புரட்டாசி. இதைக் கன்யா மாதம் என்பார்கள். சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை நாம் மாதப் பிறப்பு என்கிறோம். இந்த நாளில் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.

அனந்த விரதம் 17.9.2024 – செவ்வாய்

அனந்தன் என்றால் பகவான் மகாவிஷ்ணுவைக் குறிக்கும். அவருடைய ஆதிசேஷப் படுக்கைக்கு அனந்த சயனம் என்று பெயர். மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் இடையிலுள்ள மந்திரம் “அனந்தாய நம:’’ (மற்றவை அச்சுதாய நம: கோவிந்தாய நம:). பஞ்ச பாண்டவர்கள் வன வாசத்தில் கடும் துயரத்தில் இருந்த போது, சாட்சாத் கிருஷ்ண பகவானே அவர்களுக்கு அனந்தபத்மநாப விரதத்தின் சிறப்பைச் சொன்னார். இதை தொடர்ந்து 14 ஆண்டுகள் செய்ய வேண்டும். சிவப்பு நிற ஆடை அணிந்து செய்வது சிறப்பு. வீட்டை தூய்மைப்படுத்தி, பூஜையறையில் பெருமாள் படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். கலசம் வைத்தும் செய்யலாம். நிவேதனம் 14 எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

நிவேதனமாக அதிரசம், போளி, பால் பாயாசம், சித்ரான்னங்கள் வைத்துப் படைக்கலாம். வாழைப்பழம் தாம்பூலம் வைத்தாலும் 14 எண்ணிக்கையில் வைத்து வணங்க வேண்டும். நோன்புக் கயிறு உண்டு. கயிறு சிவப்பு நிறத்தில் 14 முடிச்சுகள் போட வேண்டும். மகாவிஷ்ணுக்குரிய மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் சொல்லி, தூப தீபம் காட்டி நிவேதிக்க வேண்டும். நோன்புக் கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். விரதத்தை முறையாக இருக்க முடியவில்லை என்று சொன்னால், குறைந்தபட்சம் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய்தீபம் போட்டு துளசி மாலை சாத்தி வணங்கி வரலாம். அருகாமையில் பள்ளிகொண்ட பெருமாள் இல்லை என்று சொன்னால், ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையே பள்ளிகொண்ட பெருமாளாக நினைத்து வணங்கலாம்.

மகாளய பட்சம் ஆரம்பம் 18.9.2024 – புதன்

இன்றிலிருந்து 15 நாட்கள் மகாளயபட்சம். இன்று முதல் 15 நாட்கள் முன்னோர்களுக்கான வழிபாடு நடத்த வேண்டும். 15 நாட்களும் நடத்த முடியாதவர்கள் மகாளய பட்சத்தில் ஏதாவது ஒரு நாளும், மகாளய அமாவாசை அன்றும் கட்டாயம் இந்த வழிபாடு நடத்துவது குடும்பத்துக்கு நல்லது. இந்த மகாளயபட்சத்தில் பித்ருக்கள் என்று சொல்லப்படும் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் வந்து இருக்கின்றார்கள். அதனால் நாம் தூய்மையாக இருக்க வேண்டும். மகாளயபட்ச காலத்தில், அவரவர் வசதிக்குத் தக்கபடி பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் என மூன்று வகையான தர்ப்பணங்களை சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்திருக்கின்றன.

அதாவது, 6 பேர்களை, பித்ருக்களாக பாவித்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலானவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக ஹோமம் செய்து, உணவளித்து, தட்சணை வழங்கி, நமஸ்கரித்துச் செய்வது. ஹிரண்யம் என்பது, பொதுவாகவே அனைவரும் செய்யும் தர்ப்பணம். அரிசி, வாழைக்காய் முதலானவற்றுடன் தட்சணை வழங்கி தர்ப்பணம் செய்வது. அல்லது அமாவாசை நாளில் எள்ளும் நீரும் இறைத்துச் செய்வது. மகாளய தர்ப்பணம் செய்பவர்கள், மகாபரணியிலும் மத்யாஷ்டமியிலும் மஹாவ்யதீபாதத்திலும் கஜச்சாயாவிலும் மறக்காமல் தர்ப்பணம் செய்து, தானங்கள் செய்வது மிகவும் உத்தமம். இப்படி இருப்பதால் அவர்களுடைய அருள் ஆசி கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகும். செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

உமா மகேஸ்வர விரதம் 18.9.2024 – புதன்

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம். இதில் உமாமகேஸ்வர விரதம் மிக முக்கியமானது. இந்த விரதத்தை முறையாக இருந்துவிட்டால் மற்ற விரதங்கள்கூட இருக்க வேண்டிய அவசிய மில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். சிவசக்தி வடிவத்தை வழிபடும் உன்னதமான விரதம் உமா மகேஸ்வர விரதம். சிவனையும் சக்தியையும் ஒருசேர வழிபட்டு, அவர்கள் நல்லாசிகளைப் பெறுவதுதான் இந்த விரதத்தின் நோக்கம். இந்தப் பூஜையால் தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை நிலவும் பெரியவர்களிடத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அந்தக் குற்றம் நீங்கும்.

இந்த விரதத்தில் 16 முடிச்சு உள்ள சிவப்பு நோன்புக் கயிற்றை பூஜை செய்து கட்டிக் கொள்வார்கள். வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யும் பொழுது இந்தப் பூஜையை மிக விரிவாகச் செய்யலாம். அதற்கான மந்திரங்களும் உண்டு. ஆனால், மிக எளிதாக இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், கணவனும் மனைவியும் இணைந்து வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை அறையில் பார்வதி பரமேஸ்வரர் படத்துக்கு அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி, தூப தீபங்கள் காண்பித்து, நிவேதனங்கள் செய்து, அதோடு சிவப்பு நிற 16 முடிச்சு உள்ள நோன்புக் கயிற்றையும் வைத்து பூஜை முடிவில் அதை கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 16 ஆண்டுகள் விடாமல் செய்தால், பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.

அப்பய தீட்சிதர் ஜெயந்தி 18.9.2024 – புதன்

600 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த மஹான் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவபக்தர். சித்த புருஷர். ‘‘என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா?” தானே இதை அறிந்து கொள்ள ஊமத்தம் சாறு பருகி, அப்பொழுதும் சிவ சிந்தையோடுதான் சொன்னவற்றை சீடர்களை கொண்டு ஏற்படுத்தினார். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது ‘‘ஆத்மார்ப்பண ஸ்துதி’’. இன்னும் ஏராளமான நூல்கள் இயற்றிய அவர் அவதார நாள் இன்று.

திருவிடைக்கழி பாதயாத்திரை 20.9.2024 – வெள்ளி

சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படும் கோயில் திருவிடைக்கழி கோயில் முருகப் பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி. அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம். முருகன் இத்தலத்திலுள்ள குராமரத்தின் அடியில் சிவனை நோக்கி தவமிருந்து பலனடைந்தார். குராமர நிழலில் அமர்ந்து சிவனை வழிபட்டதால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. தரிசிப்போரின் பழி, பாவம் போக்கும் இத்தலமுருகனை, ‘திருக்குராத்துடையார்’ என கல்வெட்டுகள் கூறுகின்றன. சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோ மீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக் கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக் கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக் கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோயிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப் பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

14.9.2024 – சனி – மதுரையில் மீனாட்சி கோயிலில் உற்சவம் (விறகு விற்ற நிகழ்ச்சி).
14.9.2024 – சனி – ஸ்ரீ வில்லிபுத்தூர் ரங்க மன்னர் கண்ணாடி சேவை.
14.9.2024 – சனி – சிதம்பரம் தேவாதி தேவன் திருப்பவித்ரோத்சவம் 5 நாள்.
15.9.2024 – ஞாயிறு – வாமன ஜெயந்தி.
15.9.2024 – ஞாயிறு – ஓணம் பண்டிகை.
15.9.2024 – ஞாயிறு – பிரதோஷம்.
15.9.2024 – ஞாயிறு – ஸ்ரீ விகனச ஆசாரியன்.
16.9.2024 – திங்கள் – கதளி கௌரி விரதம்.
16.9.2024 – திங்கள் – திருவிடை மருதூர் பவித்ரோத்சவம் நிறைவு.
17.9.2024 – செவ்வாய் – விஸ்வகர்மா ஜெயந்தி.
17.9.2024 – செவ்வாய் – பௌர்ணமி.
18.9.2024 – புதன் – திருத்தணி முருகனுக்கு பாலபிஷேகம்.
20.9.2024 – வெள்ளி – உருத்திர பசுபதி நாயனார்.
20.9.2024 – வெள்ளி – பிரகதி கௌரி விரதம்.

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: