வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: சென்னையில் இந்திய வீரர்கள் பயிற்சி


சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 ஓவர் போட்டிகளில் மோத உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 19ம் தேதி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியையொட்டி இந்திய வீரர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியினர் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர். இன்று பயிற்சி முகாம் தொடங்கியது. கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, பும்ரா, கே.எல்.ராகுல், அஸ்வின் என டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொண்டனர்.

வங்கதேச அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் அவர்களை எதிர்கொள்ள, இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சில் நீண்டநேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்ஆப்ரிக்கா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல், இந்த தொடரில் இருந்து தனது பணியை தொடங்கி உள்ளார். சென்னை டெஸ்ட் போட்டிக்காக வங்கதேச அணி நாளை மறுநாள் மாலை சென்னை வர உள்ளது. இந்த டெஸ்ட்டிற்காக டிக்கெட் விற்பனை ஆன்லைனில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.1000 ஆகும். 3 ஆண்டுக்கு பின் சேப்பாக்கத்தில் டெஸ்ட்டில் இந்தியா ஆட உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: சென்னையில் இந்திய வீரர்கள் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: