டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததால் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா தெரிவித்தார். ஹாரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் பாஜ, மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 கட்ட பட்டியல்களை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. நேற்று முன்தினம் 40 வேட்பாளர்களுடன் 3வது இறுதிகட்ட பட்டியலை வெளியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, ஆம் ஆத்மி தனித்து களமிறங்க முடிவு செய்தது. பல்வேறு கட்டங்களாக 90 தொகுதிகளுக்கும் அக்கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அவர் இன்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியில் வருகிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் இனிப்பு பரிமாறி தனது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதாப் சிங் பாஜ்வா; ஜாமீனும் தேர்தலும் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். இது நீதிமன்றத்தின் நடைமுறை. அரசு நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரு இந்தியக் குடிமகனைப் போலவே அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஹரியாணா தேர்தலுக்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.
இது நிச்சயம் ஹரியாணா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு அவர்களைப் பாதிக்குமா இல்லையா என்பதைக் காலம் தான் உணர்த்தும். எந்த ஒரு விஷயத்திலும் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு செயலில் ஈடுபட்டால், அனைத்து நிறுவனங்களின் தவறான பயன்பாடும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று கூறினார்.
The post அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததால் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: காங்கிரஸ் appeared first on Dinakaran.