பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்கள் பங்கேற்பு

 

பழநி, செப். 13: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோயிலின் மூலவரான சந்திரசேகர், ஆனந்தவல்லி அம்மனுடன் சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

அங்கு சந்திரசேகர்- ஆனந்தவல்லி அம்மன், விநாயருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வையாபுரி குளக்கரையில் ஓதுவார், திருவிளையாடல் புராண பாடல்களளை பாடி சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் சந்திரசேகர்- ஆனந்தவல்லி அம்மன் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.

The post பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: