இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மேல் விசாரணைக்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் மகாவிஷ்ணு நடத்தி வரும் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு நேற்று நேரில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். வேறு யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3.30 மணி வரை சுமார் 5.30 மணி நேரம் நடந்தது.
விசாரணையில், ‘தாய்-மகன்’ உறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்குமா என்று சர்ச்சைக்குரிய வகையில் மகாவிஷ்ணு பேசிய வீடியோவை பார்வையிட்டு அதுகுறித்தும் போலீசார் கேள்விகள் எழுப்பினர். மேலும் வெளிநாடுகளில் இருந்து பரம்பொருள் அறக்கட்டளைக்கு பல கோடி ரூபாய் நிதி வந்தது எப்படி என்றும் விசாரணை செய்தனர். மேலும் அறக்கட்டளை ஆசரமத்திற்கு வரும் நடிகைகள் உள்பட பிரபலங்களுக்கு மகாவிஷ்ணு ஆசிர்வாதம் செய்து வந்தார். அப்போது அவர்கள் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.
‘நான் தினமும் சித்தர்களிடம் பேசி வருவதாகவும், அவர் கூறும் தகவல்களைத்தான் பொதுமக்களுக்கு தெரிவித்து வருவதாக கைது செய்யப்படும்போதே போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்திருந்தார். இது உண்மையா என்பது குறித்தும் அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையின் முடிவில் அலுவலகத்தில் இருந்த லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்காக மகாவிஷ்ணுவை போலீசார் அழைத்து வந்ததையடுத்து பரம்பொருள் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் பிரதான கதவை பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. குளத்துப்பாளையத்தில் விசாரணையை முடித்த போலீசார் மகாவிஷ்ணுவை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தி பேசிய மகாவிஷ்ணுவை கண்டித்து அவிநாசி குளத்துப்பாளையம் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post திருப்பூரில் உள்ள அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்று மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை: லேப்டாப், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.