கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங் கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டி அழிக்கும் இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர்.

தொடர்ந்து நாப்கின் இயந்திரங்கள் வைப்பது, பராமரிப்பது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில்; கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, தலா 5 லட்சம் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட 8 கோடியே 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படியும், பள்ளிகளின் நிலவரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: