புதுக்கோட்டை: எந்த ஒரு அரசியல் கட்சியும் தி.மு.க.,வை மிரட்ட முடியாது, வி.சி.க.,வினர் எங்களுடைய நண்பர்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்து, மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். படகுகளை விடுவிக்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஒன்றிய அரசுதான் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைக் கைதிகளை விடுவிப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்திருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது. அதுவே நம்முடைய கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தில் எதையும் முறையாக செய்யாமல் அடிக்கல் நாட்டி விட்டு, நாங்கள் திட்டத்தை தொடங்கி விட்டோம் என்று சொல்வதால் மட்டும் பயனில்லை. இந்தத் திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் எடுப்புகள் முடிந்த பிறகு தான் கால்வாய்கள் வெட்ட முடியும்.
நிலங்களை எடுத்த பிறகுதான் அதற்கான முறையான பணிகளை தொடங்க முடியும், ஏற்கனவே அதற்கான அடிப்படையான பணிகளை செய்யவில்லை. அதை தமிழ்நாடு அரசு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; எங்களை யாரும் மிரட்ட முடியாது. திமுக எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல. விசிக எங்களுடைய தோழமைக் கட்சிதான். தோழமைக் கட்சிகளுக்கு முதலமைச்சர் மதிப்பு கொடுக்கிறார்; திருமாவளவன் எங்களை மிரட்ட வேண்டியதும் இல்லை மிரட்டவும் மாட்டார் என்றும் கூறினார்.
The post எந்த ஒரு அரசியல் கட்சியும் திமுகவை மிரட்ட முடியாது; விசிகவினர் எங்களுடைய நண்பர்கள்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.