திருச்சி : திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் 2 இடத்தில் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆர்இ பிளாக்குகளில் கடந்த ஜனவரி 12ம் தேதி திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து மண் சரிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி, பொன்மலை ஜி-கார்னர் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினரால் 60 நாட்கள் பாலம் சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்து ஐஐடி பேராசிரியர் அழகுசுந்தரம் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்ய அதன் கீழ் பகுதியில் ஒரு சென்சார் பொருத்தப்படுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி அந்த பாலத்தின் சேதமடைந்த மேல் பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி வைத்து ஆய்வும் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த மார்ச் 12ம் தேதி முதல் மீண்டும் திருச்சி- பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் சீரமைக்கப்பட்ட இந்த பாலத்திற்கு அருகே உள்ள மற்றொரு பாலத்தில் அதேபோன்ற விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் இந்த பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சரக்கு ரயில் மட்டும் கடந்து செல்லும் வழித்தடத்தின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வளைந்து செல்லும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்களின் அதிக எடையும் இந்த விரிசல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் கனரக வாகனங்களில், அதிக எண்ணிக்கையிலான டயர்கள் கொண்டு வாகனங்களின் பயன்பாடு இந்த பகுதியில் அதிகம் என்பதால், அதிக எடையினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 15 நாட்களில் விரிசலின் அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தை விரைந்து ஆய்வு செய்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் 2 இடத்தில் விரிசல் appeared first on Dinakaran.