தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 5000 நீர்நிலைகளை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ெவள்ளம் மற்றும் வறட்சியை தடுக்கும் வகையில், ஊரக பகுதிகளில் 5000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 5,000 சிறுபாசன ஏரிகளை புனரமைப்பதற்காக கடந்த 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களை பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தேவைப்படின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும். சிறுபாசன ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, பசுமைச் சூழலை ஏற்படுத்த பனை மற்றும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரக பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 5000 நீர்நிலைகளை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: